BJP: கட்சி மாறிய தகவலில் உண்மை இல்லை; பா.ஜ.க.வி.ல் இருந்து அ.தி.மு.க.வுக்கு மாறிய சரவணன் ட்விஸ்ட்
நிர்மல் குமார், அண்ணாமலைக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் அ.தி.மு.க.வுக்கு மாறிய விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
சமீப காலமாக, தமிழ்நாடு பாஜகவின் முக்கியமான பொறுப்புகளில் உள்ள சிலர் அடுத்தடுத்து விலகி வருகின்றனர். இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது. சில மாதங்களுக்கு முன் காயத்திரி ரகுராம் கட்சியிலிருந்து விலகுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
பாஜகவில் என்னதான் நடக்கிறது?
இதையடுத்து, தமிழ்நாடு பாஜகவின் தகவல் தொழில்நுட்ப (IT Wing) பிரிவின் தலைவராக இருந்த சிடிஆர் நிர்மல் குமார், சில நாட்களுக்கு முன்பு கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகுவதாக அறிவித்திருந்தார். அதன்பின் அவர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்.
மேலும் பாஜக ஐடி பிரிவு மாநில செயலாளர் திலீப் கண்ணன் ராஜினாமா செய்வதாக தெரிவித்தார். இன்று சென்னை மேற்கு மாவட்ட பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் 13 பேர் அக்கட்சியிலிருந்து விலகினர். பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட தலைவர் ஒரத்தி அன்பரசு தலைமையில் 13 நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக விலகியிருந்தனர்.
நிர்மல் குமார் vs அண்ணாமலை
இதனால், நிர்மல் குமார், அண்ணாமலைக்கு இடையேயான மோதல் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாஜகவை சேர்ந்தவர்கள் அதிமுகவுக்கு மாறிய விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. தங்கள் விருப்பம் இல்லாமல் நிர்மல் குமார் அறிக்கை வெளியிடச் செய்ததாக பாஜக ஐ.டி. பிரிவு நிர்வாகி ஆர்.கே. சரவணன் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.
கட்சி மாறிய தகவலில் உண்மை இல்லை:
இதுகுறித்து சரவணன் கூறுகையில், "நான் கட்சி மாறியதாக வெளியான தகவலில் உண்மை இல்லை. என்னுடைய அனுமதி இல்லாமல் உண்மைக்கு மாறான தகவலை வெளியிட்டுள்ளனர். என் குடும்பதே பாஜகவே சேர்ந்தவர்கள்தான். அப்பா, பெரியப்பா என அனைவரும் பாஜகவினர்தான். பிரதமர் மோடி, மாநில தலைவர் அண்ணாமலை வழிகாட்டுதலில் உயிர் இருக்கும் வரை பாஜகவில்தான் பயணிப்பேன்" என்றார்.
ஆனால், பாஜகவுக்கு மீண்டும் வருமாறு தங்கள் வற்புறுத்தப்படுவதாக பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த ஜோதி என்பவர் சரமாரி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.
முன்னதாக, பாஜகவினர் அதிமுகவில் இணைந்தது குறித்து விளக்கம் அளித்த அண்ணாமலை, "ஒரு கட்சியில் உள்ளவர்கள் மற்றொரு கட்சிக்கு செல்வது நல்லது தானே. அப்போது தான் மற்றவர்களுக்கு பொறுப்புகள் வழங்கப்படும். பாஜகவில் இருந்து ஆட்களை எடுக்க வேண்டிய நிலையில் திராவிடக் கட்சிகள் உள்ளன. தமிழ்நாட்டிற்கு நான் தோசை இட்லி சுட வரவில்லை, நான் எடுக்கும் முடிவுக்கு பாஜக தொண்டர்கள் கட்டுப்படுவார்கள். ஜெயலலிதா, கருணாநிதி போல் நானும் தலைவர் தான்" என்றார்.
அடுத்தாண்டு மக்களவை தேர்தல் நடைபெற உள்ள பாஜகவில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் உச்சக்கட்ட பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.