Polytechnic exam | பாலிடெக்னிக் தேர்வு வினாத்தாள் வெளியானதாக வதந்தி பரப்பியவர் மீது குற்றவியல் நடவடிக்கை; வாழ்நாள் தடை- டிஆர்பி அதிரடி
கணினி வழி போட்டித் தேர்வில், வினாத்தாள் வெளியானதாக வதந்தி பரப்பியவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்காக நடைபெற்ற கணினி வழி போட்டித் தேர்வில், வினாத்தாள் வெளியானதாக வதந்தி பரப்பியவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு, 2017- 2018ஆம் ஆண்டிற்கு அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை ஆசிரியர் தேர்வு மையம் வெளியிட்டது. இத்தேர்விற்கான ஆன்லைன் வழித் தேர்வு 28.10.2021, 29.10.2021, 30.10.2021, 31.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், தேர்வு மையங்கள் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட குளறுபடிகள் காரணமாக, சில தேர்வு மையங்களை மாற்ற விரும்புவதாக, விண்ணப்பதாரர்கள் வேண்டுகோள் விடுத்தனர். இதனையடுத்து, தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன.
இதற்கிடையே டிசம்பர் எட்டாம் தேதி முதல் 12-ஆம் தேதி வரை தேர்வு நடைபெறும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது. அந்த வகையில் தேர்வுகள் நேற்று தொடங்கி, நடைபெற்று வருகின்றன. முதல் நாளில் இயற்பியல், பிரிண்டிங் தொழில்நுட்பம், துணிநூல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம் ஆகியப் பாடங்களுக்குத் தேர்வு நடத்தப்பட்டன.
அந்தத் தேர்வின்போது வினாத்தாள் கசிந்ததாகத் தகவல் வெளியாகி, பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து ஆசிரியர் தேர்வு வாரியம் விசாரணையைத் தீவிரப்படுத்தியது. இதில் பல உண்மைகள் தெரியவந்தன. அதன்படி தனியார் தொழில்நுட்பக் கல்லூரியில் தேர்வு எழுதிய பெண் தேர்வர் ஒருவர், கணக்கீடு செய்வவதற்காக அளிக்கப்பட்ட வெள்ளைத்தாள் மூலம், கணினித் திரையில் தோன்றிய வினாக்களைப் பதிவு செய்துள்ளார். அதை வெளியில் எடுத்து வந்த அவர், தேர்வு வினாத்தாள் முன்கூட்டியே வெளியானதாக சமூக வலைதளங்களில் பரப்பி உள்ளார். இந்தத் தகவல் விசாரணையில் வெளிவந்தது.
இந்நிலையில், அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்காக நடைபெற்ற கணினி வழி போட்டித் தேர்வில், வினாத்தாள் வெளியானதாக வதந்தி பரப்பியவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.
மேலும் சம்பந்தப்பட்ட தேர்வர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும், அவரை வாழ்நாள் முழுவதும் தேர்வு எழுதத் தடைவிதிக்கவும் ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது.
அதேபோல ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுகள் குறித்துச் சமூக வலைதளங்களில் தவறான வதந்திகளைப் பரப்புபவர்கள் மீது அவதூறு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வாரியம் தெரிவித்துள்ளது.
மொத்தம் 1060 பணியிடங்களுக்கான அறிவிப்பில், சிவில் – 112, மெக்கானிக்கல் -219, மின்னியல் மற்றும் மின்னணுவியல்- 91, மின்னணுவியல் – 119, ஐசிஇ – 3, கணினி பொறியியல் -135, தகவல் தொழில்நுட்பம் – 6 , புரொடெக்ஷன் இன்ஜினியரிங் 6, டெக்ஸ்டைல் இன்ஜினியரிங் -6, பிரிண்டிங் டெக்னாலாஜி -6, ஆங்கிலம் -88, கணிதம் – 88, இயற்பியல் -83, வேதியியல் -84, மாடர்ன் ஆபீஸ் பிராக்டிஸ் (Modern Office Practice) -17 எனப் பல்வேறுத் துறைகளுக்கான விரிவுரையாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அரசு விதிமுறைகளின்படி, இடஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்