School Leave: தொடர் கனமழை - தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை
தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் கனமழை காரணமாக தமிழ்நாட்டில் ஐந்து மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, செங்கல்பட்டு மாவட்டம் முழுவதுமுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு வகுப்புகள் எதுவும் நடத்தக்கூடாது எனவும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வலியுறுத்தியுள்ளார். இதேபோன்று சென்னை மற்றும் திருவாரூர் மாவட்டங்களிலும், கனமழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மழை எச்சரிக்கை:
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களிலும், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளிலும், புதுச்சேரியிலும் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என மண்டல வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. ஏற்கனவே, கனமழை காரணமாக விடுக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் தான் சனிக்கிழமையான இன்று பல மாவட்டங்களில் பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் கனமழை தொடருவதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் திருவாரூர் ஆகிய 5 மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகை, திருவரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்பதால் தமிழ்நாட்டில் அடுத்த சில தினங்களுக்கு ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கடலூர், நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, இராமநாதபுரம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் வங்கக்கடலில் வரும் 27 ஆம் தேதி புயல் சின்னம் உருவாக இருப்பதால் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.