காங்கிரஸ் எம்.பி. கார்த்தி சிதம்பரத்துக்கு அறுவை சிகிச்சை.. மருத்துவமனை பரபர அறிக்கை.. உடல்நிலை எப்படி இருக்கு?
அப்போலோ மருத்துவமனையில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் கார்த்தி சிதம்பரத்துக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவரது உடல்நிலை குணமடைந்து வருவதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
கார்த்தி சிதம்பரத்துக்கு அறுவை சிகிச்சை:
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவர் ப .சிதம்பரம். கட்சியில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்த இவர், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தில் மத்திய நிதித்துறை அமைச்சராகவும் மத்திய உள்துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். தற்போது, மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார்.
இவரது மகன், கார்த்தி சிதம்பரம், காங்கிரஸ் கட்சியின் சார்பாக கடந்த 2019ஆம் ஆண்டு சிவகங்கை மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
இதையும் படிக்க: Cauvery Water: தமிழகத்திற்கு 2,600 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் - கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
மருத்துவமனை வெளியிட்ட பரபர அறிக்கை:
இந்த நிலையில், கார்த்தி சிதம்பரத்துக்கு இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், "திட்டமிட்டபடி எந்த பிரச்னையும் இன்றி அவருக்கு சிறிய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. சென்னை கிரீம்ஸ் ரோட்டில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் மருத்துவர் கே. எஸ். சந்தோஷ் ஆனந்த், அவருக்கு அறுவை சிகிச்சை செய்து வைத்தார். தற்போது, அவர் குணமடைந்து வருகிறார்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவராக வருவதற்கு கார்த்தி சிதம்பரம், பல முயற்சிகளை செய்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த 2019ஆம் ஆண்டு முதல், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக கே. எஸ். அழகிரி பதவி வகித்து வருகிறார். அவரை, மாற்ற கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கடந்தாண்டே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டு புதிய தலைவர் நியமிக்கப்படுவார் என தகவல் வெளியானது. ஆனால், பல்வேறு காரங்களால் அது தள்ளிவைக்கப்பட்டு வருகிறது. கார்த்தி சிதம்பரம், சசிகாந்த் செந்தில், ஜோதிமனி, செல்வப்பெருந்தகை ஆகியோரில் எவரேனும் ஒருவர் தலைவராக நியமிக்கப்படலாம் என தகவல் வெளியானது.
குறிப்பாக, காங்கிரஸ் சட்டப்பேரவை குழு தலைவராக உள்ள செல்வப்பெருந்தகையை தலைவராக நியமிக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கட்சி வட்டாரங்களில் பேசப்பட்டது. ஆனால், கட்சியின் மூத்த தலைவர்கள் சிலர், அதற்கு முட்டுக்கட்டை போட்டு வருவதாக கூறப்படுகிறது.
கார்த்தி சிதம்பரத்தை பொறுத்தவரையில், வரும் மக்களவை தேர்தலிலும் சிவகங்கை தொகுதியில் அவரே களம் இறக்கப்படுவார் என கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.