Cauvery Water: தமிழகத்திற்கு 2,600 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் - கர்நாடகாவிற்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
Cauvery Water: தமிழ்நாட்டிற்கு காவிரியில் இருந்து தண்ணீர் திறந்து விட, காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திற்கு வினாடிக்கு 2,600 கன அடி தண்ணீர் திறக்க வேண்டும் என கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. நவம்பர் 23ம் தேதி வரை தண்ணீர் திறக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிற்கு 2600 கனஅடி நீர் திறக்க வேண்டும் என ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்த நிலையில் ஆணையம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற காவிரி மேலாண்மை ஆணையத்தின் 27வது கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு சார்பில், நீர்வளத்துறை கூடுதல் செயலாளர் சந்தீப் சக்சேனா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காவிரி விவகாரம்:
தமிழ்நாட்டின் டெல்டா பகுதி விவசாயத்திற்கான தண்ணீரை தர கர்நாடகா மறுப்பது என்பது தொடர்கதையாகி வருகிறது.ஒவ்வொரு முறையும் காவிரி மேலாண்மை ஆணையத்தையும், உச்சநீதிமன்றத்தையும் நாடி தான் பெற வேண்டியதாக உள்ளது. இந்த முறையும் கூட சம்பா சாகுபடிக்காக தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை கர்நாடக அரசு தரவில்லை. அதன்பிறகு, தமிழ்நாடு அரசின் பல்வேறு முயற்சிகளால் காவிரி டெல்டா பாசனத்துக்கு கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. அதன்படி, தண்ணீர் திறந்துவிடப்பட்டு வந்த நிலையில் அதனை கர்நாடக அரசு திடீரென குறைத்தது.
முன்னதாக கடந்த 30 ஆம் தேதி காவிரி ஒழுங்காற்று குழுவின் 89 வது கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 4 மாவட்ட அதிகாரிகளும் கலந்துக் கொண்டனர். கூட்டத்தில் இருதரப்பு வாதங்களும் கேட்டுக்கொண்ட ஒழுங்காற்று குழு வருகிற 15 ஆம் தேதி வரை கர்நாடகாவிலிருந்து 2,500 கன அடி நீர் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என கர்நாடக அதிகாரிகளிடம் வலியுறுத்தினர். இதனை காவிரி மேலாண்மை ஆணையத்திற்கும் வலியுறுத்தினர். ஆனால் 2,500 கன அடி நீர் தர முடியாது என்றும் போதிய தண்ணீர் இல்லை என கூறி அதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதுதொடர்பாக பேசியிருந்த தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், “ நவம்பர் 3ம் தேதி காவிரி மேலாண்மை கூட்டத்தில் எவ்வளவு அளவு நீர் வேண்டும் என்பதை அறிவுறுத்துவோம். அங்கேயும் நமக்கான நீதி கிடைக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம்” என கூறியிருந்தார். இந்நிலையில் தான், தமிழ்நாட்டிற்கு 2,600 கனஅடி நீர் வழங்க வேண்டும் என, கர்நாடக அரசுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதில் கர்நாடக அரசு என்ன முடிவெடுக்க உள்ளது என்பது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காவிரி தண்ணீர் கிடைக்குமா என, தமிழக டெல்டா விவசாயிகள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.