இன்ஸ்டாகிராம்-க்கு தடை.. தமிழக மாணவர்கள் இனி பயன்படுத்த முடியாதா? சட்டமன்றத்தில் நடந்தது என்ன?
ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதுபோன்ற தளங்களைப் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதேபோன்று, தமிழ்நாட்டில் இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற தளங்களைத் தடை செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ கோரிக்கை விடுத்தார்.

சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதகமான தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என காங்கிரஸ் எம்எல்ஏ எஸ். டி. ராமச்சந்திரன், தமிழக சட்டமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார். ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதுபோன்ற தளங்களைப் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளதாகவும் எனவே, இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற தளங்களைத் தடை செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சமூக ஊடகங்களுக்கு கடும் கட்டுப்பாடு:
சமூக ஊடகங்களால் உலகமே நம் கைக்குள் அடங்கி இருக்கிறது. இருந்தபோதிலும், அதனால் பல எதிர்மறை விளைவுகள் ஏற்படுகின்றன. குறிப்பாக, மன ஆரோக்கியத்திலும் நல்வாழ்விலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இதை தவிர, பதட்டம், மனச்சோர்வு, அவநம்பிக்கை மற்றும் சமூக தனிமை உள்ளிட்ட பிரச்னைகளை ஏற்படுத்துகிறது. மேலும், சைபர் புல்லியிங், ஆரோக்கியமற்ற ஒப்பீடுகளுக்கு வழிவகுக்கிறது. அதிகப்படியான பயன்பாடு தூக்கத்தை சீர்குலைத்து மோசமான வாழ்க்கை முறைக்கு இட்டு செல்லும்.
எனவே, பல நாடுகளில் சமூக ஊடகங்களை பயன்படுத்த 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பல்வேறு விதமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி உள்பட பல நாடுகளில் கட்டுப்பாடுகள் இருக்கின்றன. உலகிலேயே முதல் நாடாக ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்த சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது.
எம்எல்ஏ விடுத்த கோரிக்கை:
இந்த நிலையில், தமிழக சட்டப்பேரவையில் கல்வி மற்றும் உயர் கல்விக்கான மானிய கோரிக்கை விவாதத்தின்போது பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் எஸ். டி. ராமச்சந்திரன், "சமூக ஊடகங்களால் ஏற்படும் பாதகமான தாக்கத்தில் இருந்து குழந்தைகளை பாதுகாக்க வேண்டும்" என கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் 16 வயதுக்குட்பட்ட குழந்தைகள் இதுபோன்ற தளங்களைப் பயன்படுத்துவதற்கு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. எனவே, இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற தளங்களைத் தடை செய்வது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும்" என்றார்.
பின்னர் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.எல்.ஏ. சின்னதுரை, "காலை உணவுத் திட்டம் மக்களிடையே பரவலாக வரவேற்பைப் பெற்றுள்ளது. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் 8 ஆம் வகுப்பு வரை இதை விரிவுபடுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறேன்.
ஒவ்வொரு கல்வியாண்டின் முதல் நாளிலும் இலவச பேருந்து பயணச்சீட்டு வழங்குவதை உறுதி செய்ய வலியுறுத்துகிறேன். பேருந்து பயணச்சீட்டு பெறுவதற்கான தூரத்தை 40 கிலோமீட்டராக அதிகரிக்கவும் அரசாங்கத்திடம் வேண்டுகோளாக விடுக்கிறேன்" என்றார்.





















