Governors' Tea Party : ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்து.. புறக்கணிப்பதாக காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விசிக அறிவிப்பு..!
தமிழ்நாடு ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்தை காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆளுநரின் குடியரசு தின தேநீர் விருந்தை காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் அறிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாடு முழுவதும் நாளை 74வது குடியரசு தினம் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை மத்திய, மாநில அரசுகள் விறுவிறுப்பாக செய்து வருகின்றது. தமிழ்நாட்டை பொறுத்தவரையில் சென்னை மெரினாவில் உழைப்பாளர் சிலை அருகே உள்ள கம்பத்தில் தேசிய கொடி ஏற்றி ஆளுநர் ஆர்.என்.ரவி முப்படையினர், காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்ளவுள்ளார்.
வழக்கமாக காந்தி சிலை அருகே நடைபெறும் குடியரசு தின விழா, இந்த முறை மெட்ரோ பணியால் உழைப்பாளர் சிலை அருகே நடத்தப்படுகிறது. தொடர்ந்து பதக்கங்கள் வழங்கும் நிகழ்வு, கலை நிகழ்ச்சிகள் எல்லாம் நடைபெறும். இதற்கான ஒத்திகை 3வது முறையாக நேற்று நடைபெற்ற நிலையில், குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
கிட்டதட்ட 6,800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இன்று நாளையும் சென்னையில் ஆளில்லா விமானங்கள், ட்ரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது.
ஆளுநர் தேநீர் விருந்து
இதனைத் தொடர்ந்து நாளை மாலை 5 மணிக்கு சென்னை கிண்டி ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அழைப்பு விடுத்துள்ளார். இதனை காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.
முன்னதாக கடந்த வாரம் சட்டமன்ற கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அதற்கு சில நாட்கள் முன்பு தான் தமிழ்நாடு என மாநிலத்தை அழைப்பதற்கு பதில் தமிழகம் என அழைக்க வேண்டுமென கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார். இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், ஆளுநர் தனது உரையில் தமிழ்நாடு என்ற வார்த்தையை தவிர்த்தது கடும் சர்ச்சையை கிளப்பியது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவிடம் புகார் தெரிவிக்க, ஆளுநர் மாளிகை தமிழகம் என ஏன் ஆளுநர் குறிப்பிட்டார் என்ற விளக்கத்தை அளித்தது குறிப்பிடத்தக்கது.
தேநீர் விருந்து புறக்கணிப்பு தொடர்பாக விசிக தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்ட அறிக்கையில், “சமீபத்தில் தமிழகம் - தமிழ்நாடு என்பது குறித்து ஆளுநர் அளித்த விளக்கம் போன்றவற்றால் அவர் கொள்கை அடிப்படையில் மாறிவிட்டார் என நம்புவதற்கு இடமில்லை. அவர் தான் ஒரு சனாதானக் கோட்பாட்டு நம்பிக்கையாளர் என தினமும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கிறார். மேலும் தமிழ்நாடு ஆளுநரை மாற்ற வேண்டுமென கோரிக்கை விடுத்து வரும் நிலையில் நேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம்” என தெரிவித்திருந்தார்.
ஆளுநர் ஆர்.எஸ்.எஸ்.காரராக செயல்படுகிறார் என குற்றம் சாட்டியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் தேநீர் விருந்தை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளார். இதேபோல் தொடர்ந்து ஆளுநர் ரவி தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். அவர் பதவி விலக வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி வருகிறோம். இதனால் தேநீர் விருந்தை புறக்கணிக்கிறோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.