இசைப் பள்ளி ஆசிரியரிடம் பாலியல் சீண்டல்: பரதநாட்டிய கலைஞர் மீது 4 பக்க புகார்!
பிரபல பரதநாட்டியக் கலைஞர் ஜாகிர்உசேன் கரூர் இசைப்பள்ளி ஆசிரியையிடம் பாலியல் சீண்டல் - தமிழ்நாடு கலை பண்பாட்டு இயக்ககம் ஆணையருக்கு அனுப்பிய 4 பக்க புகார் மனு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஜாகீர் உசேன் ஸ்ரீரங்கம் கோவிலில் இருந்து வெளியே விரட்டப்பட்டார். இந்த சம்பவம் பெரிய அளவில் சர்ச்சையானது. தமிழ்நாடு முழுக்க கலை பண்பாட்டு துறை மூலம் 17 மாவட்ட அரசு இசைப்பள்ளிகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பள்ளிகளுக்கான கலையியல் அறிவுரைஞராக ஜாகீர் உசேன் தமிழக அரசால் நியமனம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 28ம் தேதி கரூரில் உள்ள இசைப்பள்ளி ஒன்றிற்கு ஆய்வுக்காக ஜாகிர் உசேன் வந்துள்ளார். ஆய்வுப் பணிக்காக கரூர் வந்த ஜாகிர் உசேன் இசைப்பள்ளி ஆசிரியை ஒருவரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக, பாதிக்கப்பட்ட ஆசிரியை ஒருவர் தமிழ்நாடு கலை பண்பாட்டுத்துறை இயக்ககம் ஆணையருக்கு மார்ச் 8ம் தேதி புகார் கடிதம் அளித்துள்ளார். மார்ச் 8ஆம் தேதி அனுப்பப்பட்ட அந்த புகார் கடிதம் குறித்த தகவல் தற்போது கசியத் தொடங்கி உள்ளது.
ஆசிரியை அளித்த புகாரில், ஆய்வுக்காக வந்த இடத்தில் மாணவர்களுக்கு எப்படி கற்பிக்க வேண்டும் என்றும் ஆசிரியையான நீங்களே நிறைய கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி தன்னிடம் சாகிர் உசேன் தகாத முறையில் நடந்து கொண்டது குறித்து 4 பக்கம் கொண்ட புகார் மனுவை அளித்துள்ளார். இதில், எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் கடந்த மார்ச் 31ம் தேதி சென்னைக்கு நேரில் சென்று புகார் தெரிவித்துள்ளார். மேலும், இது குறித்து முதல்வர், கரூர் மாவட்ட ஆட்சியர், மின்சாரத்துறை அமைச்சர் ஆகியோர் உரிய நடவடிக்கை எடுத்து, தப்பு செய்தவருக்கு அதிகபட்ச தண்டனை வழங்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் உத்தரவின்பேரில் கரூர் கோட்டாட்சியர் பாலசுப்பிரமணியம், வட்டாட்சியர் பன்னீர்செல்வம் ஆகியோர் கரூர் மாவட்ட இசைப்பள்ளிக்கு ஏப்ரல் 4ம் தேதி சென்று சம்பந்தப்பட்ட ஆசிரியையிடம் சுமார் 1 மணி நேரம் விசாரணை நடத்தினர். மேலும், இதுகுறித்த அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் தாக்கல் செய்ய உள்ளதாக தெரிகிறது. மேலும், இந்த புகார் தொடர்பாக கலை பண்பாட்டு இயக்குனருக்கு ஜாகிர் உசேன் விளக்க கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார் அதில், முதல்வருடனான துபாய் கலை பயணத்தை முடித்துக்கொண்டு ஏப்ரல் 3ம் தேதி சென்னை வந்தடைந்தவுடன் கரூர் பரதநாட்டிய ஆசிரியர் என் மீது உங்களிடம் புகார் தெரிவித்தாக செய்தித்தாள் மூலம் அறிந்து மனவேதனை அடைந்தேன்.
கரூர் இசைப்பள்ளி பரதநாட்டிய ஆசிரியர் அரசியல் தூண்டுதலின் பேரில் சில வெளி அமைப்புகளுடன் கைக்கோர்த்து என்னை போன்ற சிறுபான்மையினர் மீது குற்றம் சுமத்துவதை முற்றிலும் மறுக்கின்றேன் என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், விசாகா கமிட்டி அமைத்து, விசாரணையை நடத்தி உண்மையை அனைவருக்கும் தெரிவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு என் மீது வீண்பழி சுமத்தி எனது பெயருக்கு குந்தகம் விளைவிக்கும் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று ஏப்ரல் 4ஆம் தேதி விளக்க கடிதம் அனுப்பி உள்ளார்.
இந்நிலையில் நேற்று 05.04.2022 சென்னை தலைமைச் செயலகத்தில் கரூர் இசை பள்ளி ஆசிரியை நேரில் சென்று துறை அதிகாரிகளிடம் இந்த குற்றச்சாட்டு குறித்து விரிவான தகவலை வழங்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவிற்கிணங்க கோட்டாட்சியர் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் பாலியல் குற்றச்சாட்டிற்கு ஆளாகியுள்ள இசை பள்ளி ஆசிரியரிடம் நேரில் விசாரணை செய்த அறிக்கையை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கோட்டாட்சியர் பாலசுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கலை பண்பாட்டுத் துறையில் முக்கிய பொறுப்பில் உள்ள ஜாகிர் உசேன் மீது இசை பள்ளி ஆசிரியை ஒருவர் அளித்த பாலியல் சீண்டல் தொடர்பான புகார் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.