Pollachi Paliyal Case: 9 பேரும் குற்றவாளிகள்.. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் தீர்ப்பு - காமக்கொடூரர்களுக்கு என்ன தண்டனை?
பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேரும் குற்றவாளிகள் என்று கோவை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகள், இளம்பெண்கள், பெண்கள் ஆகியோரை ஆசை வார்த்தை கூறி ஏமாற்றி, மிரட்டி 9 பேர் கொண்ட இளைஞர்கள் கும்பல் ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததும், அந்த பெண்களை சித்ரவதை செய்து அதை வீடியோவாக எடுத்தும் மிரட்டியுள்ளனர்.
பொள்ளாச்சி பாலியல் வழக்கு:
2019ம் ஆண்டு இந்த சம்பவம் வெளியில் வந்து ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இந்த வழக்கில் போலீசார் சபரிராஜன், திருநாவுக்கரசு, சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன், பாபு என்ற பைக் பாபு, அருளானந்தம் மற்றும் அருண்குமார் ஆகிய 9 பேரை கைது செய்தனர்.
9 பேரும் குற்றவாளிகள்:
கடந்த 6 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில் இன்று கோவை மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த வழக்கின் தீர்ப்பிற்காக நீதிபதி நந்தினி தேவி 9.40 மணிக்கு மேல் நீதிமன்றத்திற்கு வந்தார். பின்னர், குற்றவாளிகள், அரசுத் தரப்பு சாட்சியங்கள், நீதிபதி, வழக்கறிஞர்கள் மட்டுமே நீதிமன்றத்தில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 9 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி நந்தினி தேவி தீர்ப்பு வழங்கியுள்ளார். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று 12 மணிக்கு அறிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் முதல் குற்றவாளியாக திருநாவுக்கரசரும், 2வது குற்றவாளியாக சபரிராஜன், 3வது குற்றவாளியாக வசந்தகுமார், 4வது குற்றவாளியாக சதீஷ், 5வது குற்றவாளியாக மணிவண்ணன், 6வது குற்றவாளியாக ஹரன் பால், 7வது குற்றவாளியாக பைக் பாபு, அருளானாந்தம் 8வது குற்றவாளியாகவும், 9வது குற்றவாளியாக அருண்குமாரும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
சாகும் வரை ஆயுள் தண்டனை:
இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து சிபிஐ தரப்பு வழக்கறிஞர் சுரேந்தகுமார் அளித்த போட்டியில், இந்த வழக்கில் கூட்டுப் பாலியல் வன்கொடுமை நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உச்சபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம். குறைந்தபட்சம் தண்டனை 20 ஆண்டுகள் வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளோம்.
இந்த வழக்கில் அறிவியல் ரீதியாகவும், விஞ்ஞானப்பூர்வமாகவும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. பெண்களை மீண்டும் மீண்டும் பாலியல் வன்கொடுமை செய்தது நிரூபணம் ஆகியுள்ளது. வழக்கில் 48 அரசு சாட்சியங்கள் விசாரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் தைரியமாக முன்வந்து சாட்சியம் அளித்தனர். அறிவியல் ரீதியாகவும் சாட்சியங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளது.
அழிக்கப்பட்ட சாட்சிகளை மீட்டு எடுத்தோம். வீடியோ ஆதாரங்கள் எடிட் செய்யப்படாமல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது. வீடியோக்கள் எடுக்கப்பட்ட தேதி, இடம் அனைத்தும் உறுதி செய்யப்பட்டது. சிபிஐ தரப்பில் அதிகபட்சமாக சாகும்வரை ஆயுள் தண்டனை கேட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
1500 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணைக்காக சுமார் 50க்கும் மேற்பட்டோரிடம் விசாரிக்கப்பட்டது.
அரசியல் தலையீடு இருப்பதாக கூறி இந்த வழக்கின் விசாரணை சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. மாணவிகளை அவர்கள் சித்ரவதை மற்றும் பாலியல் வன்கொடுமை செய்த வீடியோ இணையத்தில் வெளியாகி ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் பேரதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இந்த வழக்கில் தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளிடம் இருந்து லேப்டாப் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதில்தான் இவர்கள் பெண்களை மிரட்டியும், சித்ரவதை செய்ததும் வீடியோவாக இருந்தது.




















