TN Corona: கோவையில் நிரம்பி வழியும் மருத்துவமனைகள்; வாகனங்களில் வெளியில் காத்திருக்கும் நோயாளிகள்
லேசான கொரோனா அறிகுறிகளுடன் வந்தவர்களை கொடிசியா உள்ளிட்ட சிகிச்சை மையங்களுக்கு செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர்.
கோவையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றுப் பாதிப்புகளும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் இன்று 3 ஆயிரத்து124 பேருக்கு தொற்று பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1இலட்சத்து 12 ஆயிரத்து 155 பேராக அதிகரித்துள்ளது. 94 ஆயிரத்து 444 பேர் குணமடைந்துள்ள நிலையில், 16 ஆயிரத்து 255 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதித்த 20 பேர் இன்று உயிரிழந்தால், உயிரிழந்தோர் எண்ணிக்கை 857 ஆக உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை இஎஸ்ஐ மருத்துவமனை கொரோனா சிறப்பு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இதுமட்டுமின்றி கோவை அரசு மருத்துவமனை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைகள், 8 தற்காலிக கொரோனா சிகிச்சை மையங்கள், 66 தனியார் மருத்துவமனைகள், 11 தனியார் சிகிச்சை மையங்களில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.
கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று மாலை நிலவரப்படி 530 சாதாரண படுக்கைகளில் 353 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 177 காலியிடங்கள் உள்ளன. அதேசமயம் ஆக்சிஜன் வசதிகள் கொண்ட 286 படுக்கைகளில் 276 படுக்கைகள் நிரம்பியுள்ளன. பத்து படுக்கைகள் மட்டுமே காலியாக உள்ளன. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள 14 படுக்கைகளும் நிரம்பியுள்ளன.
இந்நிலையில் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இன்று மாலை அதிகளவிலான கொரோனா நோயாளிகள் குவிந்தனர். மருத்துவமனையில் சிகிச்சைக்காக 200 க்கும் மேற்பட்டோர் ஒரே நேரத்தில் வந்தனர். மருத்துவமனை வளாகத்தில் நோயாளிகள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். சிலர் ஆம்புலன்ஸ் வாகனங்களிலும், கார்களிலும் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மருத்துவமனை நிர்வாகத்தினர் செய்வதறியாது தவித்தனர். பின்னர் கொரோனா நோயாளிகளின் சிடி ஸ்கேன் உள்ளிட்டவை எடுத்து, தொற்றின் தன்மையை பொறுத்து இஎஸ்ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். லேசான கொரோனா அறிகுறிகளுடன் வந்தவர்களை கொடிசியா உள்ளிட்ட சிகிச்சை மையங்களுக்கு செல்லுமாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் அறிவுறுத்தினர். வாகன வசதி இல்லாதவர்கள் கொரோனா சிகிச்சை மையங்களுக்கு மாநகராட்சி சார்பில் வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து இஎஸ்ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் ரவீந்தரனிடம் கேட்ட போது, “ஆம்புலன்சில் இரண்டு, மூன்று பேர் தான் காத்திருந்தனர். 200 பேர் கார்களில் காத்திருந்தனர். எதற்காக நிற்கின்றனர் என்றே எனக்கு தெரியவில்லை. கொரோனா தொற்று பாதித்தவர்கள் எங்கு சிகிச்சைக்காக செல்வது என்பது தெரியாமல் இம்மருத்துவமனைக்கு வந்துள்ளனர்.
கொரோனா பாதிப்பு என்றாலே கோவை மக்களுக்கு இஎஸ்ஐ மருத்துவமனை தான் நினைவிற்கு வருகிறது. இம்மருத்துவமனையில் சிறப்பான சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏராளமானோர் இம்மருத்துவமனைக்கு வருகின்றனர். நோயாளிகளின் கொரோனா தொற்று தன்மையை பொறுத்தும், படுக்கைகளின் இருப்பை பொறுத்தும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுகின்றனர். அறிகுறி இல்லாமல் தொற்றுக்குள்ளானவர்களையும், லேசான தொற்று பாதிப்பு இருப்பவர்களையும் கொடிசியா உள்ளிட்ட சிகிச்சை மையங்களுக்கு செல்ல அறிவுறுத்தி வருகிறோம்” என அவர் தெரிவித்தார்.