சும்மா சொல்லல.. 3 துறைகளில் ஊழல்.. எடுத்து விட்டால் அவ்வளவுதான்.. திமுகவுக்கு விஜய் வார்னிங்
கடந்த வாரம் நிதியமைச்சர் மரிய வில்சன் பேசும்போது 3 துறைகளின் ஊழல் அறிக்கை என் மேஜையில் இருக்கிறது என சொன்னார். அவர் போகிற போக்கில் சொல்லவில்லை என விஜய் தெரிவித்துள்ளார்.

எனது மேஜையில் 3 துறைகளின் ஊழல் பட்டியல் உள்ளது. அதனை ஓபன் செய்ய வைத்து விடாதீர்கள் என திமுகவுக்கு முதலமைச்சர் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சட்டப்பேரவையில் கடந்த திமுக ஆட்சியில் பல்வேறு துறையில் ஊழல், முறைகேடுகள் நடந்திருப்பதாக தமிழக வெற்றிக் கழகம் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் என திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது. அப்படியாக இன்று திமுக முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி பேசும்போது ஊழல் செய்ததாக சொல்வதற்கு ஆதாரம் இருந்தால் காட்டுங்கள் என கூறினார்.
இதற்கு பதிலடி கொடுத்த அமைச்சர் ராஜ்மோகன், “திமுகவினர் என்ன பேசினாலும் ஆதாரம் காட்டுங்கள் என சொல்கிறார்கள். அமைச்சர்கள் பேசினால் தவறு நடந்திருக்கலாம் என கூறுகிறார்கள். ஆதாரங்களை நாங்கள் காட்டும்போதே இப்படி பேசுகிறார்கள். இந்த விஷயத்தில் முதலமைச்சர் விஜய் வைத்திருக்கும் ஆதாரங்களை எடுத்துக் காட்டினால் அவர்களின் நிலைமை கவலையாக தான் இருக்கிறது என தெரிவித்தார்.
உடனே எழுந்து பேசிய முதலமைச்சர் விஜய், “நான் சொல்ல வேண்டாம் என்று தான் நினைத்தேன். ஆதாரம் ஆதாரம் என கேட்கிறீர்கள். கடந்த வாரம் நிதியமைச்சர் மரிய வில்சன் பேசும்போது 3 துறைகளின் ஊழல் அறிக்கை என் மேஜையில் இருக்கிறது என சொன்னார். அவர் போகிற போக்கில் சொல்லவில்லை. உண்மையிலேயே என் மேஜையில் அந்த கோப்புகள் உள்ளது. அதை ஓபன் செய்ய வைத்து விடாதீர்கள். எதை எப்போது ஓபன் செய்ய வேண்டுமோ அப்போது நாங்கல் அதை செய்வோம்” என கூறினார்.
இதன்பின்னர் பேசுங்க.. பேசுங்க என எதிர்கட்சிகள் சொல்கிறார்கள். ஆனால் முதலமைச்சர் பேச ஆரம்பித்தால், ஆதாரத்தை காட்ட ஆரம்பித்தால் என்ன நடக்கும் என்பது புரியும் என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய விஜய், “மக்கள் கிட்ட எப்போது பேச வேண்டும், என்ன பேச வேண்டும், எப்படி பேச வேண்டும் என பேசி விட்டு தான் அன்பாக ஆசையாக எங்கள் எல்லாரையும் இங்கு உட்கார வைத்திருக்கிறார்கள். நான் பேசுவேன். பேசக்கூடாது என்பதெல்லாம் இல்லை. இடைத்தேர்தலிலாவது சிலருக்கு நல்லது நடக்க வேண்டும் அல்லவா!” என தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த திமுக எம்.எல்.ஏ. ஐ.பெரியசாமி, “நாங்களும் அன்பாக ஆசையாக பேசிதான் ஒரே தொகுதியில் 9 முறை நின்று 7 முறை வெற்றி பெற்றிருக்கிறேன். 2 முறை அதிகமாக வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளேன். அந்த அங்கீகாரத்தை மக்கள் வழங்கியிருக்கிறார்கள்” என கூறினார்.
ஏற்கனவே நிதி மற்றும் மின்சாரத்துறையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்னும் சில துறைகளில் அடுத்தடுத்து வெள்ளை அறிக்கை வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
ட்ரெண்டிங் செய்திகள்





















