தமிழக அமைச்சரவையை மாற்றியது ஏன்? - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
தமிழக அமைச்சரவையை மாற்றியது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழக அமைச்சரவையை மாற்றியது ஏன் என்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ்நாட்டில் 20,000 கோடி முதலீட்டில் மின்சார வாகனம் தயாரிக்க ஹூண்டாய் நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ”ஹூண்டாய் நிறுவனம் கார் உற்பத்தியில் இரண்டாவது இடம் வகிக்கிறது. இந்நிறுவனம் 15 ஆயிரம் பேருக்கு நேரடி வேலை வாய்ப்பும், 2 லட்சம் பேருக்கு மறைமுக வேலை வாய்ப்பும் வழங்குகிறது. மின்சார வாகன உற்பத்தியில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக உள்ளது என்றார்.
தமிழக அமைச்சரவை மாற்றம் ஏன்?
மேலும், நிர்வாக காரணங்களுக்காக அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன. தொழில் துறை ஏற்கெனவே முன்னேறியுள்ளது. இனிமேலும் உயரப்போகிறது” என முதலமைச்சர் தெரிவித்துளார். ”புதிய தொழில்துறை அமைச்சர் TRB ராஜா, தமிழகத்துக்கு அதிக முதலீடுகளை ஈர்ப்பார் என நம்புகிறேன்”. என்றும் தெரிவித்தார்.
தமிழக அமைச்சரவையில் மாற்றம்
நேற்றுமுன்தினம் ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்தி குறிப்பில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிந்துரையின் பேரில், பால்வளத்துறை அமைச்சராக இருந்த சா.மு. நாசர் நீக்கப்பட்டு, மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா புதிய அமைச்சராக நியமிக்கப்படுகிறார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் இன்று காலையில் டி.ஆர்.பி.ராஜா அமைச்சராக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து, அமைச்சர்களுக்கு ஒதுக்கப்பட்ட துறைகள் குறித்து அறிவிப்பு வெளியானது. அதன்படி, புதிதாக பதவியேற்ற டி.ஆர்.பி.ராஜாவுக்கு தொழிற்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே தொழிற்துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசுவுக்கு நிதி மற்றும் மனித வளத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. நிதி அமைச்சராக இருந்த பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனுக்கு தகவல் தொழிநுட்பத்துறை ஒதுக்கப்பட்டுள்ளது. பால்வளத்துறை அமைச்சராக மனோ தங்கராஜ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் சாமிநாதனுக்கு, கூடுதலாக தமிழ் வளர்ச்சி துறை ஒதுக்கப்பட்டுள்ளது.
ஹூண்டாய் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தம் தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
”இந்தியாவின் முதல் ஸ்மார்ட் போக்குவரத்துத் தீர்வுகள் வழங்கும் நிறுவனமும், இந்தியாவில் துவங்கிய நாள் முதல் மிகப்பெரிய ஏற்றுமதி நிறுவனமாக உள்ள ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் (HMIL), தமிழ்நாட்டில் நீண்டகால, பெருமுதலீட்டு திட்டங்கள் குறித்த அறிவிப்பை இன்று வெளியிட்டது. மின்சக்தி வாகனங்கள் மற்றும் வாகன தள நவீனமயமாக்கலின் கூடுதல் செயல்பாடுகளுக்காக HMIL நிறுவனம் அடுத்த 10 ஆண்டுகளில் (2023-2032) பல கட்டங்களில் ரூ. 20 000 கோடி முதலீடு செய்ய உள்ளது.
இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அன்சு கிம் அவர்கள் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம் (Guidance Tamil Nadu) நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி V.விஷ்ணு, I.A.S., அவர்களுடன் தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள், மாண்புமிகு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு, மாண்புமிகு தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை அமைச்சர் டாக்டர். T.R.B. ராஜா, தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தக துறை கூடுதல் தலைமை செயலர் S. கிருஷ்ணன், I.A.S., மற்றும் தமிழ்நாடு அரசு மூத்த அதிகாரிகள் ஆகியோர் முன்னிலையில் பரிமாறிக்கொண்டார்.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உரையாற்றிய ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி அன்சு கிம் அவர்கள், "ஹூண்டாய், தமிழ்நாட்டில் தொடர்ந்து முதலீடு செய்து வரும் ஒரு பெருநிறுவனமாக இருந்து வருகிறது. மாநிலத்தின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்தவும், நாடு தன்னிறைவடைந்து இருக்கவும் உதவும் இந்த கூட்டணி தமிழ்நாட்டின் மீது ஹூண்டாய் கொண்டுள்ள அக்கறையின் சான்றாகும். எங்களது நீண்டகால திட்டத்தின் பகுதியாக, இந்தியாவில், ஹூண்டாய் மின்சக்தி வாகன உற்பத்தி மையமாக தமிழ்நாட்டினை திகழச் செய்வதற்கான திட்டங்கள் இறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளை மிஞ்சும் வகையிலான மிகச்சிறந்த அம்சங்கள் மற்றும் தொழில்நுட்பங்களை நமது வாகனங்களில் வழங்கி நமது நிலையை உறுதி செய்ய முடியும்," என்றார்.
மின்சக்தி வாகள மாற்றத்திற்கான நீடித்ததன்மை மிக்க சூழலியலை நிர்மாணிப்பதற்கான தமிழ்நாட்டின் செயல்பாடுகளுடன், உத்திகள் அடிப்படையிலான கூட்டணியை அமைக்க HMI. முனைகிறது. இதன் அடிப்படையில், உலகத்தரம் மிக்க, ஆண்டுக்கு 1,78,000 பேட்டரிகளை அசெம்பிளி செய்யவல்ல தொழிலகத்தையும் உருவாக்க உள்ளது. இது மட்டுமின்றி, வாடிக்கையாளர்களின் தடங்கலற்ற பயணத்தை உறுதி செய்ய பெரும் நெடுஞ்சாலைகளின் முக்கிய இடங்களில், அடுத்த 5 ஆண்டுகளில் 100 மின்சக்தி வாகன சார்ஜிங் நிலையங்கள் அமைக்கப்படும். இவற்றில், 5 இரட்டை அதிவிரைவு சார்ஜிங் நிலையங்கள் (DC 150 KW + DC 60 KW), 10 ஒற்றை விரைவு சார்ஜிங் நிலையங்கள் (DC 150 Kw) மற்றும் 85 ஒற்றை விரைவு சார்ஜிங் நிலையங்கள் (DC 6O KW) ஆகியவற்றை உள்ளடக்கியது.
ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தொழிற்சாலையின் உற்பத்தித் திறனை 8,50,000 வாகனங்களாக உயர்த்தவும், மின்சக்தி & ICE வாகனங்களை உற்பத்தி செய்யவும் திட்டமிடப்பட்டுள்ளதாக HMI அறிவித்தது. பசுமை ஆற்றலை முன்னிறுத்தும் ஹூண்டாய் மோட்டார் குழுமத்தின் நீண்டகால உத்திமிகு திட்டத்தின் பகுதியாக, ஹூண்டாய் நிறுவனம், வரும் காலத்தில், நீடித்ததன்மை மிக்க எதிர்கால தொழில்நுட்பங்களை தொடர்ந்து ஆராயும்.
ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட்-ன் Executive Director - Corporate Affairs D.S.கிம். Vice President - Finance T. சரவணன் மற்றும் Associate Vice President - Corporate Affairs புனீத் ஆனந்த் ஆகியோரும் நிகழ்ச்சியின்போது உடனிருந்தனர்.