Pongal Gift: போகிற போக்கில் முதலமைச்சர் ஸ்டாலின் கொடுத்த பொங்கல் பரிசு.. பயனாளர்கள் மகிழ்ச்சி!
சென்னை அடையாறில் நடைபயிற்சி சென்ற போது முதலமைச்சர் ஸ்டாலின் பயனாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கினார்.
சென்னை அடையாறு தொல்காப்பியர் பூங்காவில் நடைபயிற்சி மேற்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின், அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கும் ஊழியர்களுக்கு முழு நீள செங்கரும்பு மற்றும் புத்தாடை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசினை வழங்கினார். அங்கு பணியாற்றி வரும் வெளிநாட்டவர் உட்பட 140 பயனாளர்களுக்கு இந்த பரிசுத்தொகுப்பினை முதலமைச்சர் ஸ்டாலினே வழங்கினார். அப்போது, மக்கள் நல்வாழ்வு அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் இந்து பத்திரிகையின் ஆசிரியர் ராம் ஆகியோர் உடனிருந்தார்.
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அடையார் Theosophical society இல் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வார்கள், அங்கு பணியாற்றிக் கொண்டிருக்கின்ற 140 பேருக்கு ஆண்டுதோறும் பொங்கல் பரிசு தருவார்கள் இந்த ஆண்டும் பொங்கல் பரிசு தந்து மகிழ்ந்தார்கள். @mkstalin #Masubramanian #TNHealthminister pic.twitter.com/kShW25eKya
— Subramanian.Ma (@Subramanian_ma) January 7, 2023
முன்னதாக,தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் அனைத்து அரிசி பெறும் ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு மற்றும் ரூபாய் 1000 ரொக்கப் பணம் என வழங்க தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. இதற்காக, கடந்த 4ம் தேதி முதல் வீடு வீடாக சென்று ரேஷன் கடை ஊழியர்களால் பயனாளர்களுக்கு டோக்கன் வழங்கப்படுகிறது. வரும் 9ம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைக்கிறார். அதைதொடர்ந்து, தமிழகம் முழுவதும் பரிசுப் பொருட்கள் விநியோம் தொடங்கி, போகிப் பண்டிகைக்குள் கொடுத்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி தமிழகத்தில் உள்ள 2.19 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் இந்த பொங்கல் பரிசு மற்றும் தொகுப்பு வழங்கப்பட உள்ளது. 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதன் மூலமாக தமிழக அரசுக்கு ரூ. 2,356.67 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டது.