CM Stalin: "இந்தியாவுக்காகத்தான் நாங்களும் பாடுபடுகிறோம்; எங்கள் அணியும் இந்திய அணிதான்” - முதல்வர் ஸ்டாலின்
விளையாட்டுத்துறையின் செயல்பாடுகளை பார்க்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
CM Stalin: விளையாட்டுத்துறையின் செயல்பாடுகளை பார்க்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
முதலமைச்சர் கோப்பை 2023 நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, துரைமுருகன், பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதனை அடுத்து, தமிழ்நாடு மகளிர் கால்பந்து விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு 60 லட்சம் மதிப்பிலான காசோலையை முதலமைச்சர் ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் வழங்கினர்.
உதயநிதிக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு:
அப்போது முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, ”விளையாட்டுத்துறை அமைச்சராக சிறப்பாக செயல்பட்டு வருகிறார் உதயநிதி. விளையாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி பொறுப்பேற்ற பின் தமிழ்நாடு விளையாட்டுத்துறை ஒரு புத்துணர்ச்சி பெற்றுள்ளது. விளையாட்டுத்துறையின் செயல்பாடுகளை பார்க்கும்போது எனக்கு பெருமையாக இருக்கிறது. பெற்றோரை மகிழ்விக்கக்கூடிய பிள்ளையாக இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். விளையாட்டு போட்டிகளை சிறப்பாக நடத்தி முடித்த அமைச்சர் உதயநிதியை பாராட்ட கடமைப்பட்டுள்ளேன்” என்றார்.
மேலும், ”உலக வீரர்கள் மட்டுமல்ல உள்ளூர் வீரர்களையும் நாம் மரியாதையுடன் நடத்துவதுதான் விளையாட்டின் நோக்கம். விளையாட்டு வீரர்களை மதித்து அவர்களை அன்புடன் நடத்துவது அரசின் கடமை. மாநில அளவில் வெற்றி பெற்ற வீரர்கள் இந்திய அளவில் வெற்றிக்காக உழைக்கவேண்டும். இந்தியாவுக்காகத்தான் நாங்களும் பாடுபடுகிறோம். எங்கள் அணியும் இந்திய அணி தான். இந்திய வெற்றி பெறத்தான் நாங்களும் பாடுபடுகிறோம்." என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
”முழு செலவையும் தமிழக அரசே ஏற்கும்"
இதற்கு முன்னதாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது, ”செஸ் ஒலிம்பியாட் போட்டியை போலவே முதலமைச்சர் விளையாட்டு போட்டியும் சிறப்பாக நடத்தி உள்ளோம். விளையாட்டுத்துறை அமைச்சராக நான் பொருப்பேற்றதும் போட்ட முதல் கையெழுத்து முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிக்கான கையெழுத்து தான். முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டி இந்தியாவில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.
மணிப்பூர் மாநிலத்தில் அசராதான சூழல் நிலவி வருகிறது. அங்க இருக்கும் விளையாட்டு வீரர்கள் தமிழகத்தில் வந்து பயிற்சி மேற்கொள்ளலாம் என்று ஒரு அறிவிப்பை வெளியிட்டது தமிழ்நாடு முதலமைச்சர் மட்டும் தான். நமது அறிவிப்பை ஏற்று வாள்வீச்சு வீரர்கள் விரைவில் தமிழ்நாடு வந்து பயிற்சி எடுக்க உள்ளனர். அவர்கள் பயிற்சி பெற முழு செலவையும் தமிழக அரசே ஏற்க இருக்கிறது" என்றார்.
மேலும் படிக்க