CM Stalin: ராஜ்பவனில் ஆளுநர் ரவியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின்! பரபரப்பு பின்னணி என்ன?
சென்னை ராஜ்பவனில் ஆளுநர் ஆர்.என்.ரவியை, முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
CM Stalin: மசோதாக்கள் ஒப்புதல் தொடர்பாக இருவரும் அமர்ந்து பேசுமாறு உச்சநீதிமன்றம் யோசனை கூறிய நிலையில், ஆளுநர் ரவியை, முதல்வர் ஸ்டாலின் சந்தித்திருக்கிறார்.
தமிழ்நாடு அரசு வழக்கு:
தமிழ்நாடு ஆளுநராக ஆர்.என். ரவி பொறுப்பேற்றதில் இருந்தே, அவருக்கும் அரசுக்கும் இடையேயான உறவு என்பது ஏழாம் பொருத்தமாகவே உள்ளது. இதற்கு உதாரணமாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ரவி நீண்டகாலமாக ஒப்புதல் வழங்காமல் இருப்பதை கூறலாம்.
இதையடுத்து தான் நீண்டகாலமாக நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்க, ஆளுநருக்கு உத்தரவிட வேண்டும் என தமிழக அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்தமனு விசாரணைக்கு வந்த போது, ஆளுநருக்கு எதிராக நீதிபதிகள் சரமாரியாக கேள்வி எழுப்பினர்.
முதல்வர் ஸ்டாலினுக்கு அழைப்பு விடுத்த ஆளுநர் ரவி:
கடைசியாக இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது,”சட்டத்தை செயலிழக்க செய்யவோ, முடக்கி வைக்கவோ ஆளுநருக்கு அதிகாரம் இல்லை. இந்த விவகாரத்தில் அளுநரே தீர்வு காண வேண்டும். இல்லையென்றால் நாங்கள் உத்தரவு பிறப்பிக்க நேரிடும்.
தமிழ்நாடு ஆளுநருக்கும், முதலமைச்சருருக்கும் இடையே தீர்க்கப்பட வேண்டிய பல விஷயங்கள் உள்ளன. ஆளுநர் முதலமைச்சருடன் அமர்ந்து இதைத் தீர்த்தால் நாங்கள் பாராட்டுவோம்.
ஆளுநர் முதலமைச்சரை அழைத்து பேசினால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறோம்” என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்து இருந்தனர். அதன் விளைவாக தான் மசோதாக்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த முதலமைச்சர் ஸ்டாலினுக்கு, ஆளுநர் அழைப்பு விடுத்திருந்தார்.
ஆளுநரை சந்தித்த முதல்வர்:
இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று மாலை 5.30 மணிக்கு ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்தார் முதல்வர் ஸ்டாலின். நிலுவையில் உள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக இருவரும் விவாதித்ததாக கூறப்படுகிறது.
மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் விவகாரம் குறித்து ஆளுநர், முதலமைச்சர் அமர்ந்து பேசி தீர்வு காணலாம் என, உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி இருந்த நிலையில், ஆளுநர் ரவியை முதல்வர் ஸ்டாலின் சந்தித்திருக்கிறார். சந்திப்பில் ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் சுமார் 45 நிமிடங்கள் முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளதாக தெரிகிறது.
இந்த சந்திப்பின்போது, அமைச்சர்கள் துரைமுருகன், தங்கம் தென்னரசு, ராஜகண்ணப்பன் ஆகியோர் உடன் இருந்தனர். தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் இடையே நீண்ட காலமாக மோதல் உள்ள நிலையில், இருவரின் சந்திப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
Vijayakanth: ”பெண் பார்க்க சன்னியாசி போல வந்த விஜயகாந்த்” - பிரேமலதா பகிர்ந்த கேப்டனின் அறியாத மறுபக்கம்
"ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு வந்துராதீங்க" மக்களுக்கு ஷாக் கொடுத்த பிரதமர் மோடி