‛கில்லி மாதிரி செயல்படும் முதல்வர் ஸ்டாலின்...’ -நடிகர் பிரபு புகழாரம்!
நவம்பர் 1 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவித்துள்ள தமிழக அரசின் அறிவிப்பை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலினின் ஆட்சியை பாராட்டியுள்ளார் நடிகர் பிரபு.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் பிரபு. 64 வதயான நடிகர் பிரபு சுமார் 40 ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்துள்ளார். ஹீரோவாக பல வெற்றி படங்களை கொடுத்துள்ள நடிகர் பிரபு, தற்போது வயதுக்கு ஏற்ப குணச்சித்திர கேரக்டர்களில் நடித்து வருகிறார். எப்பொழுதும் பார்க்கவே செம க்யூட் ஆகவும் கொழுகொழுவென்று இருக்கும் நடிகர் பிரபு திடீரென தனது உடல் எடையை குறைத்து இளம் ஹீரோக்களுக்கு நிகராக மாறியுள்ளார். நடிகர் பிரபு எடை குறைந்து ஸ்லிம்மான தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வந்தது. மக்கள் நலனில் அக்கறை கொண்டுள்ள அவர் பல முக்கிய நிகழ்வுகளில் தன் பங்கு இருக்கும்படி பார்த்துக்கொள்வார். அதுபோல கோரோணா நிதிக்கும் முதல் ஆளாக வந்து நிவாரண உதவி அளித்தார். எனவே தமிழ் மக்களுக்கு மிகவும் பிடித்த நடிகராகவும், எப்பொழுதும் மக்கள் பக்கம் நிற்கிற மனிதராகவும் இருக்கிறார் நடிகர் பிரபு.
இந்நிலையில் நவம்பர் 1 முதல் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ள தமிழக அரசை நடிகர் பிரபு புகழ்ந்து தள்ளியுள்ளார். ஸ்டாலின் தலைமையிலான அரசு கில்லி மாதிரி செயல்படுவதாகவும், அதன் காரணமாகவே பள்ளிகள் திறக்கப்படுகின்றன என்றும் கூறிய அவர், பள்ளிகள் திறக்கப்படுவதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மேகேஷ் பொய்யாமொழிக்கும் நன்றி தெரிவித்தார். இரு வாரங்கள் முன்பு நடிகர் திலகம் சிவாஜியின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாடி அடையாறில் உள்ள சிவாஜி மண்டபத்திற்கு வந்து மரியாதை செலுத்தியதற்கும் நெகிழ்ந்து போய் நன்றி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 1 முதல் மழலையர், நர்சரி மற்றும் அங்கன்வாடி பள்ளிகள் திறப்பதற்கு அனுமதி அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக அரசு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நவம்பர் 1 முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் கடற்கரைக்கு பொதுமக்கள் செல்ல அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளார். நர்சரி, அங்கன்வாடி, மழலையர் பள்ளிகள் முழுமையாக இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும் மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம் நடத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 100 பேர் வரை பங்கேற்க அனுமதி அளித்து உத்தரவிடப்பட்டுள்ள நிலையில்,இறப்பு தொடர்பான நிகழ்வுகளில் 50 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அரசியல், சமுதாய, கலாச்சார நிகழ்வுகள் மற்றும் திருவிழாக்கள் நடத்த தடை தொடரும் என்று அரசு அறிவித்துள்ளது.