CM Stalin: ‘கருணாநிதி வாழ்க்கையோடு பின்னி பிணைந்தது சேலம்’ - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்
சேலத்துக்கும் கருணாநிதிக்குமான நட்பு என்பது ஒரு அன்பான குடும்ப நட்பாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சேலத்துக்கும் கருணாநிதிக்குமான நட்பு என்பது ஒரு அன்பான குடும்ப நட்பாகும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தி.மு.க.வினரால் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சேலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக 3 நாள் சுற்றுப்பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று அங்கு சென்றார். நேற்று மாலை ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் இன்று பல அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்படி சேலம் அண்ணா பூங்கா வளாகத்தில் அமைக்கப்பட்ட கருணாநிதியின் முழு உருவச்சிலையை திறந்து வைத்தார்.
தொடர்ந்து சேலத்தில் ரூ.96 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள ஈரடுக்கு மேம்பாலத்தை முதலமைச்சர் திறந்து வைத்தார். இந்த பேருந்து நிலையத்திற்கு முத்தமிழறிஞர் கலைஞர் கருணாநிதி நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தொடர்ந்து நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி கலைஞர் கருணாநிதி. அவரின் நூற்றாண்டு விழா தொடங்கியுள்ள நேரத்தில் சேலத்தில் முழு உருவச்சிலை திறந்து வைக்கப்பட்டுள்ளது. சேலத்தில் ஏற்கனவே திமுக சார்பில் 2019ம் ஆண்டு கருணாநிதி சிலை திறந்து வைக்கப்பட்டது. சேலத்துக்கும் கருணாநிதிக்குமான நட்பு என்பது ஒரு அன்பான குடும்ப நட்பாகும்.
அவர் முழு கதை, வசனக்கர்த்தாவாக ஆக காரணம் சேலம் தான். மார்டர்ன் தியேட்டர் உரிமையாளர் சுந்தரம் தான் கருணாநிதிக்கு ரூ.500 சம்பளம் கொடுத்து பணியமர்த்தினார்கள். இங்கு பணி புரிந்தால் கழக பணிகளுக்கு இடையூறு வரக்கூடாது என உத்தரவாதம் பெற்று தான் சேர்ந்தார். அப்படி பணியாற்ற தொடங்கிய நேரத்தில் வெளியான படம் தான் ‘மந்திரி குமாரி’.
கருணாநிதி சேலத்தில் தங்கியிருந்த காலக்கட்டத்தில், 1949 ஆம் ஆண்டு திமுக உருவானது. கழகத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தபோது சேலத்தில் இருந்து கருணாநிதி சென்னைக்கே வந்தார். அந்த அளவுக்கு அவரின் வாழ்க்கையோடு பின்னி பிணைந்தது சேலம். கருணாநிதி முதலமைச்சராக இருந்தபோது மறைந்த என் ஆரூயிர் அண்ணன் வீரபாண்டி ஆறுமுகத்தால் இந்த மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்கள் செய்யப்பட்டுள்ளது. தற்போது பொறுப்பு அமைச்சராக உள்ள கே.என்.நேருவும் அதிக திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். முந்தைய திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்களை விட அதிகமான திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது” என தெரிவித்தார்.