CM Stalin Speech: "வந்தே பாரத் ரயில் டிக்கெட் விலையை குறையுங்க.." பிரதமர் முன்பே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சரவெடி..!
வந்தே பாரத் ரயிலின் டிக்கெட் கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடி முன்பாகவே விழா மேடையில் வலியுறுத்தினார்.
தமிழ்நாடு வந்த பிரதமர் மோடி சென்னை விமான நிலைய புதிய முனையம், சென்னை - கோவை வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்தார். பிறகு, பல்லாவரத்தில் நடைபெற்று வரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
அல்ஸ்டாம் கிரிக்கெட் மைதானத்தில் நடந்து வரும் இந்த நிகழ்ச்சியின்போது, 5,200 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, மத்திய ரயில்வேதுறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மத்திய மீன்வளம் மற்றும் கால்நடை வளர்ப்பு மற்றும் பால்வளம், தகவல் ஒலிபரப்புத்துறை இணையமைச்சர் எல். முருகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாநில பொருளாதாரத்தின் ரத்த நாளங்களாக விளங்கும் சாலை திட்டப்பணி:
இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், "தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை மோடி தொடங்கி வைத்துள்ளார். மாநிலங்களின் வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை மத்திய அரசு நிறைவேற்றி தர வேண்டும். மாநில பொருளாதாரத்தின் ரத்த நாளங்களாக விளங்கும் சாலை திட்டப்பணிகளுக்காக மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்கும். சாலை அடர்த்தி குறியீட்டில் தமிழ்நாடு முன்னிலையில் உள்ளது.
தமிழ்நாட்டின் பல பகுதிகளின் அடுத்தகட்ட வளர்ச்சிக்கு சாலை திட்டங்கள் தேவையாக உள்ளன. சென்னை - மதுரவாயல் பறக்கும் பாலம் கிழக்கு கடற்கரை சாலையை 4 வழிச்சாலையாக மாற்றுதல், சென்னை மதுரை தேசிய நெடுஞ்சாலை 6 வழியாக மாற்றுதல் உள்ளிட்ட முக்கிய திட்டங்களை விரைவுபடுத்த வேண்டும்.
இரண்டாவது மிகப்பெரிய பொருளாதாரமாக உள்ள தமிழ்நாடு:
சென்னை - மதுரை இடையே வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்க வேண்டும். அனைத்து தரப்பினரும் பயணிக்கும் வகையில், பயணக் கட்டணத்தை குறைக்க வேண்டும்.
இந்தியாவில் 2வது மிகப்பெரிய பொருளாதாரமாக விளங்கும் தமிழ்நாட்டுக்கு, ரயில்வேயால் முக்கியத்துவம் அளிக்கப்படவில்லை. ரயில்வே பட்ஜெட்டில், தமிழ்நாட்டுக்கு போதிய நிதி ஒதுக்காததால், பல திட்டங்கள் நிறைவேற்றப்படவில்லை.
தமிழ்நாட்டுக்கு புதிய ரயில் திட்டங்களை அறிவிப்பதோடு, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றி தர வேண்டும். கோவை, மதுரை , திருச்சி, தூத்துக்குடி விமான நிலைய விரிவாக்கத்திற்கு தேவையான நிலங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டு நிலம் எடுக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த விரிவாக்கப் பணிகளுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கி பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான கருத்துரு மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். விரைவில் மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும். மக்கள் தேவைகளை நிறைவேற்ற வேண்டிய கடமை மாநிலங்களுக்கு உள்ளது. மாநிலங்களின் நிதித் தேவைகளையும், மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற மத்திய அரசு உதவி செய்ய வேண்டும். பிரதமரும், முதலமைச்சராக இருந்த காரணத்தினால், எனது கோரிக்கையை உணர்வார்" என்றார்.