உடைக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை.. அதே அண்ணா சாலையில் நிறுவும் முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னை சிம்சன் அருகே பெரியார் சிலை, வாலாஜா சாலை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா சிலை என பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு நடுவே ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதியின் கம்பீர சிலை மீண்டும் நிறுவப்பட உள்ளது
வரும் ஜூன் 3ம் தேதி சென்னை அண்ணாசாலையில் ஓமந்தூரார் தோட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் வெண்கல சிலை அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சட்டசபையில் அறிவித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் நீலமேகத்தின் கேள்விக்கு கலைஞருக்கு சிலை நிறுவப்படும் என அறிவித்திருந்தார் முதல்வர் முக.ஸ்டாலின்.
கலைஞருக்கு சிலை திறக்க வேண்டும் என்பது முதல்வர் ஸ்டாலினின் ஆசை மட்டுமல்ல.. அது பெரியாரின் ஆசையாக இருந்தது. தம்பி கருணாநிதிக்கு சிலை வைத்தே ஆக வேண்டும் என அண்ணா காலத்திலேயே அறிக்கை விட்டார் பெரியார். ஆனால் பேரறிஞர் அண்ணா எத்தனை முறை கேட்டும் அதை கருணாநிதி திட்டவட்டமாக மறுத்தார்.
இதையடுத்து அண்ணாவின் மறைவிற்கு பிறகு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழகத்தால் கருணாநிதிக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இதற்கான பாராட்டு விழாவை சென்னை வேப்பேரியில் நடத்தினார். பெரியார் கருணாநிதிக்கான பாராட்டு விழாவில் கருணாநிதிக்கு சிலை வைக்க வேண்டும் என மீண்டும் தன் விருப்பத்தை வெளிப்படுத்தினார் பெரியார். ``முதலில் உங்களுக்குச் சிலை அமைப்பதைப் பற்றி யோசிக்கிறேன். அதன்பிறகு இதைப் பார்க்கலாம்” என நழுவி விட்டார் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி.
தான் சொன்னதைப் போலவே பெரியார் உயிருடன் இருக்கும்போது சென்னையில் பெரியாருக்கு சிலை அமைத்தார் கருணாநிதி. அதன்பிறகு கருணாநிதிக்குச் சிலை அமைக்கும் பணியை திராவிடர் கழகம் மேற்கொண்டது. பெரியாரின் மறைவிற்கு பிறகு அதற்கான பணிகளைத் தொடங்கினார் மணியம்மையார். ஆனால் `தனக்கு திராவிடர் கழகம் சிலை வைப்பதில் விருப்பம் இல்லை" எனத் தெரிவித்தார் கருணாநிதி. ஆனாலும் அந்தப் பணியை மேற்கொண்டது திராவிடர் கழகம்.
இதையடுத்து திராவிடர் கழகத்தின் சார்பில் 1975ம் ஆண்டு அண்ணா சாலையில் தர்கா அருகே முழு உருவ வெண்கல சிலை நிறுவப்பட்டது. அதை குன்றக்குடிகளாரின் திறந்து வைத்தார். சென்னை அண்ணாசாலையில் 1975-ம் ஆண்டு முதல் 1984-ம் ஆண்டு வரை கம்பீரமாக கருணாநிதியின் சிலை இருந்தது.
1984ல் எம்ஜிஆர் மறைந்தபோது எம்ஜிஆர் ஆதரவாளர்கள் சிலர் கருணாநிதியின் சிலையை சேதப்படுத்தினர். கருணாநிதியின் சிலையின் நெஞ்சுப்பகுதியில் கடப்பாரைக் கொண்டு ஒருவர் சேதப்படுத்தும் புகைப்படத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்டிருந்தது.
அப்போது அந்த புகைப்படத்தை தன்னுடைய முரசொலி நாளேட்டில் வெளியிட்டு, உடன்பிறப்பே, செயல்பட விட்டோர் சிரித்து மகிழ்ந்து நின்றாலும் அந்த சின்னத்தம்பி என் முதுகிலே குத்தவில்லை நெஞ்சிலேதான் குத்துகிறான்; அதனால் நிம்மதி எனக்கு! வாழ்க! வாழ்க என எழுதினார் கலைஞர்.
இதையடுத்து சேதப்படுத்தப்பட்ட சிலையை சரிசெய்து மீண்டும் நிறுவ திக கேட்டபோது விடாப்படியாக மறுத்துவிட்டார் கருணாநிதி. பிறகு வந்த தன்னுடைய ஆட்சிக்காலத்தில் அந்த சிலை இருந்த பீடத்தையும் அகற்ற உத்தரவிட்டார் கருணாநிதி. அதன் பிறகு கருணாநிதிக்கான சிலை பற்றிய பேச்சுகள் எழவே இல்லை.
இதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு உடல்நிலை பாதுக்கப்பட்டு கருணாநிது உயிரிழந்த பிறகு திமுக தலைமை அலுவலகமான சென்னை அண்ணா அறிவாலயத்தில் கருணாநிதிக்கு சிலை திறக்கப்பட்டது. சோனியா காந்தி, ராகுல் காந்தி, பினராயி விஜயன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அறிவாலயத்தில் நிறுவப்பட்டாலும், பொது இடத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்கப்பட வேண்டும் எனும் பெரியாரின் ஆசை நிராசையாக வே இருந்து வந்தது.
இந்நிலையில்தான் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் வரும் ஜூன் 3-ஆம் தேதி கருணாநிதியின் சிலை நிறுவப்பட உள்ளது. ஓமந்தூரார் தோட்டம் தற்போது பன்னோக்கு மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. புதிய தலைமை செயலகமாக கருணாநிதி அதை பார்த்து கட்டிய நிலையில் தான் ஆட்சிப் பொறுப்பேற்றதும் மருத்துவமனையாக அறிவித்தார் ஜெயலலிதா. தற்போது அதே வளாகத்தில்தான், சிலை சேதப்படுத்தப்பட்ட அதே அண்ணா சாலையில்தான் கருணாநிதிக்கு சிலை வைக்க உள்ளார் முதல்வர் ஸ்டாலின்.
தனது தந்தைக்கு சிலை வைக்க ஸ்டாலின் விரும்பும் முன்னேயே, வேறு யார் விரும்பும் முன்னேயே அது பெரியாரின் ஆசையாகத்தான் இருந்தது. இப்போது சென்னை அண்ணா சாலையின் தொடக்கத்தில் சிம்சன் அருகே பெரியார் சிலை, வாலாஜா சாலை சந்திப்பில் பேரறிஞர் அண்ணா சிலை என பெரியார் மற்றும் அண்ணா சிலைகளுக்கு நடுவே ஓமந்தூரார் தோட்டத்தில் கருணாநிதியின் கம்பீர சிலை மீண்டும் நிறுவப்பட உள்ளது.