Cyclone Michaung: 'மழை நிலவரம் எப்படி இருக்கு?' - மாவட்ட ஆட்சியர்களுக்கு போன் போட்ட முதலமைச்சர்..
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட ஆட்சியர்களை தனித்தனியாக தொடர்பு கொண்டு மிக்ஜாம் புயல் எச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட ஆட்சியர்களை தனித்தனியாக தொடர்புக் கொண்டு மிக்ஜாம் புயல் எச்சரிக்கை தொடர்பாக எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
மிக்ஜாம் புயல்
நடப்பாண்டு தமிழ்நாட்டை நெருங்கி கரையை கடக்கும் புயலாக “மிக்ஜாம்” உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது இன்று புயலாக வலுவடைந்து வடமேற்கு திசையில் நகரவுள்ளது. நாளை (டிசம்பர் 4) தமிழ்நாட்டின் வட கடலோர பகுதிகள் மற்றும் தெற்கு ஆந்திராவில் மையம் கொள்ளும் மிக்ஜாம் புயலானது நாளை மறுநாள் (டிசம்பர் 5) தெற்கு ஆந்திராவில் உள்ள நெல்லூருக்கும், மசூலிப்பட்டணத்துக்கும் இடையே கரையை கடக்கவுள்ளது.
4 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
இதன் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 4 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவசிய தேவையின்றி வெளியே வர வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும் மின்சார கசிவு உள்ளிட மின் தொடர்பான பிரச்சினைகளுக்கு அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்தை தொடர்பு கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மின் வாரியத்தின் 24 மணி நேர சேவைக்காக 94987 94987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மிக்ஜாம் புயல் காரணமாக கனமழை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ள சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நாளை (டிசம்பர் 4) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இன்று மணிக்கு 60-70 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 4 மாவட்டங்களிலும் தேசிய மீட்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். கனமழை காரணமாக சென்னையில் சில விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல் ஆந்திராவுக்கு செல்லும் ஏராளமான ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. மழை பெய்வதை பொறுத்து சென்னையின் புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்களுக்கு போன் போட்ட முதலமைச்சர்
இதனிடையே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்ட ஆட்சியர்களை தொலைபேசி மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனித்தனியாக தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது புயலை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். தேவையான முன்னேற்பாடுகளை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.