MK Stalin: மக்களுக்கு அறிவுரையா? - முதல்ல நீங்க கேளுங்க.. பிரதமரை விமர்சித்த முதல்வர் ஸ்டாலின்!
மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வியெழுப்பியுள்ளார்.

மேற்கு ஆசிய போர் சூழல் குறித்து நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கிய பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்.
மேற்கு ஆசியாவில் கடுமையான போர் ஏற்பட்டுள்ள நிலையில் அது உலக நாடுகளிடையே பொருளாதாரத்தை கடுமையாக பாதித்துள்ளது. இந்தியாவிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது. இந்தியாவின் பெரும்பாலான எண்ணெய் மற்றும் எரிவாயு தேவைகள் இந்த போரால் கடுமையான தட்டுப்பாட்டை சந்தித்துள்ளது. மக்கள் பெரும் அவதியடைந்து வரும் நிலையில் போர்க்கால அடிப்படையில் மத்திய அரசும் நடவடிக்கை எடுத்து வருகிறது. வணிக சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில் அது படிப்படியாக சரி செய்யப்பட்டு வருகிறது. எனினும் நிலைமை சீரடைய பல நாட்கள் எடுக்கும் என சொல்லப்படுகிறது.
இப்படியான நிலையில் மேற்கு ஆசிய போர் தொடர்பாக மக்களவையில் பேசிய பிரதமர் மோடி, "மேற்கு ஆசியாவில் நடந்து வரும் மோதலால் ஏற்பட்டுள்ள உலகம் முழுவதுமான கடினமான சூழ்நிலைகள் நீண்ட காலம் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நம்முடைய நாட்டு மக்கள் ஒற்றுமையாகவும், விழிப்புடனும் இருக்க வேண்டும்.கோவிட் பெருந்தொற்றின் போதும் நாம் ஒற்றுமையாக நின்று இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொண்டோம். அதேபோல், இந்த முறையும் நாம் தயாராக இருக்க வேண்டும். ஒவ்வொரு சவாலையும் நாம் பொறுமையுடனும் விடாமுயற்சியுடனும் எதிர்கொள்ள வேண்டும். இதுவே நமது அடையாளம், நமது பலம்" என தெரிவித்தார்.
பிரதமரின் இந்த பேச்சு நாட்டு மக்களிடையே பெரும் கவலைகளை ஏற்படுத்தியுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்கள் பிரதமர் மோடியின் பேச்சு மக்களை பயமுறுத்துவது போல இருப்பதாக விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில் தான் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
Preparedness cannot be outsourced to the people.
— M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் (@mkstalin) March 24, 2026
Prepared for what — leadership, or its absence?
மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா?#Covid19-க்குத் தயாரானதுபோல் #WestAsiaWar-இன் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார்… pic.twitter.com/b90TgEc7he
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைத்தளப் பதிவில், “மாண்புமிகு பிரதமர் அவர்களே… தயாராக இருக்க வேண்டியது ஒன்றிய அரசா? நாட்டு மக்களா?. கொரோனாவுக்குத் தயாரானது போல் மேற்கு ஆசிய போரின் பாதிப்புகளுக்கும் தயாராக இருக்க வேண்டும் என்கிறார் மாண்புமிகு பிரதமர். தொலைநோக்கும் முன்னெச்சரிக்கையும் இன்றிச் செயல்படும் ஒன்றிய பா.ஜ.க. அரசைக் கண்டித்துத் தமிழ்நாடெங்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.
இத்தனைக்கும் பிறகு, “மக்கள் தயாராக இருக்க வேண்டும்” என்று மக்களுக்கே அறிவுரை வழங்குகிறீர்கள். மக்களைத் தயாராக இருக்கச் சொல்லும் முன், அவர்களைக் காக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? மேற்காசியப் போரின் தாக்கங்களில் இருந்து இந்திய மக்களைப் பாதுகாக்க, நீங்கள் எடுத்துள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன? இப்போது நாட்டின் கேள்வி ஒன்றுதான்: “எங்களைக் காக்கப் பிரதமர் தயாராக இருக்கிறாரா?” என கேள்வியெழுப்பியுள்ளார்.
தொடர்ந்து போர்ச்சூழல் தீவிரமடைந்த உடனே, அதன் தாக்கங்களை உணர்ந்து சிலிண்டர்கள் தடையின்றி கிடைப்பது, வளைகுடா நாடுகளில் சிக்கிய தமிழர்களை மீட்பது, மத்திய அரசுக்கு எதிரான போராட்டம், மின் அடுப்புகளை பயன்படுத்துபவர்களுக்கு மானியம், MSME நிறுவனங்களுக்கு மானியத்துடன் கூடிய கடன் என தமிழ்நாடு அரசால் செயல்படுத்தப்பட்ட விஷயங்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் பட்டியலிட்டுள்ளார்.
ட்ரெண்டிங் செய்திகள்






















