ஸ்டீயரிங் பிடிக்கும் திருநங்கைகள்.. சுழலும் வாழ்க்கைச் சக்கரம்! - சீர்காழியில் நெகிழ்ச்சி சம்பவம்!
திருமாவளவன் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக சீர்காழியில் திருநங்கைகளுக்கு 'இலவச ஓட்டுநர் பயிற்சி' தனியார் ஓட்டுநர் பயிற்சி பள்ளியில் தொடங்கப்ப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: வழக்கமான மாலை மரியாதைகள், பட்டாசுகள் மற்றும் பிரம்மாண்ட போஸ்டர்களைக் தாண்டி, சமூகத்தில் நலிவடைந்த மனிதர்களின் கைகளில் "சுயசார்பு எனும் சாவி"யைக் கொடுத்து திருமாவளவனின் பிறந்தநாளை நெகிழ்ச்சியோடு கொண்டாடியிருக்கிறது சீர்காழி.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவனின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு புதிய வாழ்வாதாரப் புரட்சிக்கு வித்திடப்பட்டுள்ளது. சீர்காழி ஜெயா ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி கரம்கோர்க்க, திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 'முழு இலவச ஓட்டுநர் பயிற்சி' அளிக்கும் பிரம்மாண்ட விழா இன்று உற்சாகமாக நடைபெற்றது.
கியர் மாற்றும் காலம் வந்துவிட்டது: எஸ்.எஸ்.பாலாஜி பேச்சு!
விழாவிற்குத் தலைமை தாங்கிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ்.பாலாஜி, ஓட்டுநர் பயிற்சியை முறைப்படி தொடங்கி வைத்து ஆற்றிய உரை அரங்கை நெகிழச் செய்தது.
அவர் பேசுகையில், "தலைவர் எழுச்சித் தமிழரின் பிறந்தநாள் கொண்டாட்டம் என்பது வெறும் ஆடம்பர விழா அல்ல; அது எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் விழா என்பதற்கு இந்நிகழ்வே சாட்சி! சமுதாயத்தில் பலவிதமான புறக்கணிப்புகளைச் சந்திக்கும் திருநங்கைகளும், ஆதரவற்ற பெண்களும் பிறரை எதிர்பார்க்காமல், தங்கள் சொந்தக் காலில் நிற்க வேண்டும். வாகனத்தின் கியரை மாற்றுவதைப் போல, இவர்களது வாழ்க்கையின் பாதையையும் மாற்றும் வல்லமை இந்த ஓட்டுநர் பயிற்சிக்கு உண்டு. ஜெயா ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் இந்தச் சமூக அக்கறை மிகுந்த முயற்சி வரலாற்றுச் சிறப்புமிக்கது" எனப் பூரிப்போடு குறிப்பிட்டார்.
சாலை விதிகளோடு 'வாழ்க்கைப் பாடம்'
இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாகப் பங்கேற்ற அரசுப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள், பயனாளிகளுக்கு நம்பிக்கைச் சிறகுகளை அளித்தனர். மயிலாடுதுறை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ராம்குமார், மோட்டார் வாகன ஆய்வாளர் கதிர்வேல் மற்றும் சீர்காழி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளர் விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வாழ்த்துகளைப் பொழிந்தனர்.
அதிகாரிகள் பேசுகையில், "வாகனம் ஓட்டுவது என்பது வெறும் தொழில் மட்டுமல்ல, அது தன்னம்பிக்கையின் அடையாளம். முறையான பயிற்சி பெற்று, நீங்கள் ஓட்டுநர் உரிமம் (Driving License) பெறும் அனைத்து நடைமுறைகளுக்கும் போக்குவரத்துத் துறை முழு உறுதுணையாக நிற்கும். சுயதொழில் தொடங்கும் அளவுக்கு உங்கள் கைகள் பலப்பட வேண்டும்" என்று உற்சாகப்படுத்தினர்.
50 பெண்களின் கண்களில் புதிய நம்பிக்கை!
இத்திட்டத்தின் முதற்கட்டமாக, சீர்காழி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட திருநங்கைகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்கள் ஆர்வமுடன் ஓட்டுநர் பயிற்சியில் இணைந்தனர். ஸ்டீயரிங்கை முதன்முறையாகத் தொட்டுப் பார்த்த பயனாளிகளின் முகத்தில் புன்னகையும், கண்களில் சுயமரியாதையோடு வாழப்போகும் நம்பிக்கையும் ததும்பியது.
"சமூகத்தின் தடைகளைத் தாண்டி, சக்கரம் சுழல சுழல எங்கள் வாழ்க்கையும் முன்னேறும் என்ற நம்பிக்கை வந்துள்ளது" எனப் பயிற்சிக்கு வந்த பயனாளிகள் நெகிழ்ச்சியுடன் நன்றியைப் பகிர்ந்துகொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவில், ஜெயா ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியின் நிர்வாகிகள், விசிக மாவட்ட, ஒன்றிய, நகரப் பொறுப்பாளர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு விழாவைக் திருவிழா போலக் கொண்டாடி மகிழ்ந்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்






















