Childrens park: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! சென்னையில் எங்கெல்லாம் சுற்றிப்பார்க்கலாம் தெரியுமா?
சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா நாளை திறந்திருக்கும் என்று வன உயிரின காப்பாளர் அறிவித்துள்ளார்.
சென்னை கிண்டியில் உள்ள சிறுவர் பூங்கா நாளை திறந்திருக்கும் என்று வன உயிரின காப்பாளர் அறிவித்துள்ளார். சமீபத்தில் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை கிண்டி சிறுவர் பூங்கா திறக்கும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் இந்த கல்வியாண்டிற்கான பள்ளி வேலை நாட்கள் கடந்த 28-ஆம் தேதியுடன் முடிவடைந்து. 29-ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது. இந்த நிலையில், பள்ளிகள் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் திறக்கும் தேதியைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் அறிவித்தார்.
அதன்படி, ஜூன் 1 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த கல்வியாண்டில் நடைபெறவுள்ள 10, 11, மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தேதிகளையும் அமைச்சர் அறிவித்தார். 2023-24 ஆண்டிற்கான 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 8 ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 18 -ஆம் தேதி தொடங்கும் என்றும், 11- ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 19 ஆம் தேதி தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில், சில பெற்றோர் தங்களுக்கு அலுவலகத்தில் தொடர் விடுமுறை கிடைக்காத நிலையில் வெளியூர் சுற்றுலா தலங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது. இந்நிலையில் சென்னை வாசிகள் சென்னையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களுக்கு சென்று தங்கள் குழந்தைகளுடன் நேரம் செலவிட நினைக்கும் சென்னை சுற்றுவட்டார மக்கள் கீழ்காணும் சுற்றுலாத்தலங்களுக்கு சென்று நேரம் செலவிடலாம்...
சென்னையில் சுற்றி பார்க்க வேண்டிய இடங்கள்:
பிர்லா கோளரங்கம்
சென்னை கோட்டூர்புரம் பெரியார் அறிவியல் தொழில்நுட்ப மையத்தில் பிர்ளா கோளாரங்கம் உள்ளது. இங்கு தற்போது உயர்தொழில்நுட்பத்துடன் கூடிய அதிநவீனஒளிப்படக் கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் இரவு வான் காட்சிகளை மிகத் துல்லியமாகக் காண முடியும். கோளரங்கத்தில் நட்சத்திரங்கள், நட்சத்திரக் கூட்டங்கள் மற்றும் அவற்றின் நகர்வுகளைக் காணலாம். சூரியக் குடும்பத்தின் தோற்றம் பற்றியும், ஒவ்வொரு கோள்கள் பற்றியும் விரிவான விளக்கங்களுடன் திரையில் காணலாம்.
எலியட்ஸ் கடற்கரை
எலியட்ஸ் கடற்கரை சென்னையின் பெசன்ட் நகர் பகுதியில் அமைந்ததுள்ளது. மெரீனா கடற்கரையின் தெற்கில் அமைந்த இக்கடற்கரை அருகில் அஷ்டலட்சுமி கோயிலும், வேளாங்கன்னி தேவாலயமும் அமைந்துள்ளன.
மெரினா கடற்கரை
மெரினா கடற்கரை சிட்டி சென்டரிலிருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
ஒரு நாளைக்கு ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இங்கு வருகை தருகின்றனர். மனதுக்கு இதமாக, காதலர்கள் பேசி மகிழ, குடும்பத்துடன் குதூகலிக்க, நண்பர்களுடன் அரட்டை அடிக்க பலர் இங்கு வருகை தருகிறனர்.
முட்டுக்காடு படகுக்குழாம்
சென்னையிலிருந்து 1 மணி நேரத் தொலைவில் அமைந்துள்ள ஏரியில் போட் ஹவுஸ் அமைக்கப்பட்டுள்ளது. நண்பர்கள், குடும்பத்துடன் போட்டிங் செல்ல இது ஏற்ற இடம். இது மிகவும் அமைதியான, அழகான இடம் என்பதால் அனைவரும் விரும்பக் கூடியதாக உள்ளது. இதனையொட்டி அமைந்துள்ள கடற்கரையில் அலைச் சறுக்கு, கனோ, பெடல் படகு, ரோ படகு போன்ற விளையாட்டுகள் இருக்கின்றன.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டையாக செயின்ட் ஜார்ஜ் கோட்டை அறியப்படுகிறது. 1644-ஆம் ஆண்டு கட்டப்பட்ட இது சென்னையின் மிகவும் பழமையான கட்டிடமாகவும் புகழ்பெற்றதாகவும் உள்ளது.
மாமல்லபுரம் கடற்கரை
இந்த கடற்கரைக்கு சென்னை மட்டும் அல்லாமல் புறநகர் பகுதிகளில் இருந்து ஏராளமானோர் வருகின்றனர். சென்னையிலிருந்து 60 கிமீ தூரத்தில் இந்த கடற்கரை அமைந்துள்ளது. இங்கு குடைவரைக் கோவில்கள், பஞ்ச பாண்டவர் தேர்கள், பெரிய உருண்டை பாறை உள்ளிட்டவை சுற்றுலாப் பயணிகளை வியப்பில் ஆழ்த்துகிறது.
வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா
அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா தமிழ்நாட்டின் சென்னையில் உள்ள வண்டலூரில் அமைந்துள்ளது. இது வண்டலூர் பூங்கா என்றும் அழைக்கப்படுகிறது. இப்பூங்கா 1855-ல் தோற்றுவிக்கப்பட்ட இந்தியாவின் முதல் உயிரியல் பூங்காவாகும். இங்கு 170-க்கும் அதிகமான பாலூட்டிகள், பறவைகள் மற்றும் ஊர்வன ஆகியவை உள்ளன.