குறையுமா மின்கட்டணம்; போராட்டத்தில் சிறு, குறு நிறுவனங்கள்: அமைச்சருடன் முதலமைச்சர் ஆலோசனை!
முதலமைச்சர் ஸ்டாலிடன் அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
சிறு, குறு நிறுவனங்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் ஆழ்வார்பேட்டை முகாம் அலுவலகத்தில் சந்தித்து சிறு, குறு, நடுத்தர தொழில்கள் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் சிறு, குறு நிறுவனங்கள் வேலைநிறுத்தம்:
தமிழ்நாடு முழுவதும் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. அதில், தொழில்துறையினருக்கு உயர்த்திய மின்கட்டணத்தை திரும்பப் பெறுதல் உள்ளிட்ட 6 கோரிக்கையை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, மின்கட்டண உயர்வை கண்டித்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் இன்று ஒருநாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஈரோட்டில் தமிழ்நாடு தொழில்துறை மின்நுகர்வீர் கூட்டமைப்பினர் வேலைநிறுத்தத்திலும், பண்ருட்டியில் 300க்கும் மேற்பட்ட முந்திரி தொழிற்சாலைகளும் மூடப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தினால் தமிழ்நாடு முழுவதும் உற்பத்தியை சார்ந்திருக்கும் தொழில் நிறுவனங்களுக்கு ரூ1.50கோடி இழப்பு ஏற்படும் என்று கூறப்படுகிறது.
எங்கெங்கெல்லாம் போராட்டம்..?
- ஈரோட்டில் 20க்கும் மேற்பட்ட அமைப்புகளைச் சேர்ந்த 3 லட்சம் நிறுவனங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்றுள்ளன.
- மதுரையில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளன.
- திருப்பூரில் பனியன், நிட்டிங், பிரிண்டிங் என 10,000 நிறுவனங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன.
- சென்னை, மதுரை, ஈரோடு, கோவை, நாமக்கல், திருவள்ளூர், திருப்பூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருச்சி, உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வேலை நிறுத்தப்போராட்டம் நடைபெற்று வருகிறது.