CM Stalin: மிக்ஜாம் புயலால் வடியாத வெள்ள நீர்: ஒப்புக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின்!
சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாத நிலை நீடிக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
CM Stalin: சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் வெள்ள நீர் இன்னும் வடியாத நிலை நீடிக்கிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.
“மிக்ஜாம்” புயல்:
மிக்ஜாம் புயல் நேற்று முன் தினம் வட கடலோர தமிழகத்தில் கடுமையான சேதாரத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் மிக்ஜாம் புயலால் கடும் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை பெய்து இருக்கிறது. நேற்று முன்தினம் பெய்த கனமழையால் சென்னை மாநகரமே முடங்கியுள்ளது. தற்போது சென்னையில் மழை இல்லாத சூழலில், தண்ணீர் சில இடங்களில் வடிந்துள்ளது. ஆனால், பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வடியாமல் தேங்கி நிற்கிறது. பலரும் தங்கள் குடியிருப்புகளை இழந்து தவித்து வருகின்றனர். உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி தண்ணீரில் தத்தளித்து வருகின்றனர்.
இதனால் மாநகராட்சி பணியாளர்கள், தீயணைப்பு வீரர்கள், மாநில பேரிடர் மீட்புப் படை, இந்திய விமானப்படை, கடலோர காவல் படை, தேசிய பேரிடர் மீட்பு படையைச் சேர்ந்தவர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். படகுகளை வாடகைக்கு எடுத்தது மட்டுமின்றி, மீனவர்களின் படகுகளும் மீட்பு பணிக்காக பயன்படுத்தப்பட்டுள்ளன.
"வெள்ளநீர் வடியாத நிலை நீடிக்கிறது”
இது ஒரு பக்கமிருக்க வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் ஹெலிகாப்டர் மூலம் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. 4 ஹெலிகாப்டர்கள் மூலம் 16 இடங்களில் இதுவரை 950 கிலோ உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மிக்ஜாம் புயல் காரணமாக இதுவரை 17 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் இன்னும் வெள்ளநீர் வடியாத நிலை நீடிக்கிறது. உணவு, பால் போன்ற அத்தியாவசியத் தேவைகள் அனைவர்க்கும் கிடைப்பதை உறுதிசெய்ய, களத்தில் பலரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையோடு களப்பணியைத் தொடர்கிறோம்!#CycloneMichaung pic.twitter.com/oTl3HBMFMA
— M.K.Stalin (@mkstalin) December 6, 2023
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், ”சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் இன்னும் வெள்ள நீர் வடியாத நிலை நீடிக்கிறது. உணவு, பால் போன்ற அத்தியாவசியத் தேவைகள் அனைவர்க்கும் கிடைப்பதை உறுதிசெய்ய, களத்தில் பலரும் உழைத்துக் கொண்டிருக்கிறோம். விரைவில் நிலைமை சீரடையும் என்ற நம்பிக்கையோடு களப்பணியைத் தொடர்கிறோம்” என்று பதிவிட்டுள்ளார்.
முதல்வர் ஸ்டாலின் சொன்ன என்ன?
முன்னதாக, நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முதல்வர் ஸ்டாலின், “4000 கோடி ரூபாய்க்கு பணிகள் செய்தும் சென்னை மிதக்கிறது என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர். 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்ததால்தான், இவ்வளவு பெரிய வரலாறு காணாத, 47 வருடங்களில் இல்லாத அளவிலான மழை பெய்தும் சென்னை தப்பித்து உள்ளது.
4000 கோடி ரூபாய்க்கு திட்டமிட்டு செலவு செய்து பணிகள் நிறைவேற்றப்பட்டதால்தான் சென்னை உடனடியாக மீண்டு வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் செய்யப்படாத பணிகள், திமுக ஆட்சி காலத்தில் 2 ஆண்டுகளில் செய்து முடிக்கப்பட்டுள்ளன" என்றார்.