CM Stalin:கொளுத்தும் வெயில்! மக்களுக்கு முதலமைச்சர் அட்வைஸ் - என்ன?
கோடை வெப்பம் வாட்டி வரும் நிலையில், பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கோடை வெப்பத்தை எதிர்கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கான வழிகாட்டுதல்கள் மற்றும் அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, வெப்பநிலை அதிகரிக்கும், வெப்ப அலை வீசும் என்பது போன்ற செய்திகள் தினந்தோறும் வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதனை உணர்த்தும் வகையில் கோடை வெப்பம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு வடதமிழ்நாட்டின் உள் மாவட்டங்களில் அதிக வெப்பமும் வெப்ப அவையும் ஏற்படக்கூடும்' என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இத்தகைய சூழலில் பொதுமக்கள் கவனத்துடனும் மிகுந்த எச்சரிக்கையுடனும் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பொதுவாக கோடை காலம் என்பது வெப்பம் அதிகம் உள்ள மாதங்களாக இருந்தாலும், நாளுக்கு நாள் வெப்ப அளவு அதிகமாகி வருகிறது. இதில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை ஆகும் அதனால் நான் நேற்றைய தினம் தலைமைச் செயலகத்தில் அரசுத் துறை அதிகாரிகளுடன் இது தொடர்பாக விரிவான ஆலோசனை நடத்தினேன்.
”கவனமாக பாதுகாக்க வேண்டும்”:
இந்திய வானிலை ஆய்வு மைய அதிகாரிகள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மருத்துவர்கள். சமூகச் செயற்பாட்டாளர்கள் ஆகியோரின் ஆலோசனையை அரசு அதிகாரிகள் கேட்டுத் தெரிந்து கொண்டதன் அடிப்படையில் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்த அறிக்கையை வெளியிடுவது மிக மிக அவசியமானதாக கருதுகிறேன்.வெப்பநிலை அதிகமாகும் காலங்களில் குழந்தைகள், பள்ளி மாணவ மாணவிகள், வயதானவர்கள் கர்ப்பிணி பெண்கள் உடல்நலக் குறைபாடுகள் உடையவர்கள் அதிகமாக பாதிக்கப்படலாம். இவர்களை மிகக் கவனமாக பாதுகாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்ல வேண்டாம் எனவும், குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்களை மிகக கவனமாக பாதுகாக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.