CM Stalin Met PM Modi: நள்ளிரவில் பிரதமர் மோடியை சந்தித்த முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழக வெள்ள பாதிப்பிற்கான கோரிக்கைகள் என்ன?
CM Stalin Met PM Modi: டெல்லியில் பிரதமர் மோடியை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
CM Stalin Met PM Modi: தமிழ்நாடு வெள்ள பாதிப்புகளுக்கான நிரந்தர தீர்வு பணிகளுக்கு 12 ஆயிரத்து 659 கோடி நிதி வழங்க வேண்டும் என, பிரதமர் மோடியை நேரில் சந்தித்து முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சந்தித்து வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை புதுடெல்லியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சந்தித்து, மிக்ஜம் புயல் கனமழையால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு விரைந்து நிதி ஒதுக்கீடு செய்யக் கோரியும், தென் மாவட்டங்களில் தற்போது பெய்த அதி கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள், மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்து, அப்பாதிப்புகளை சீரமைத்திட தேவையான நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்திட வேண்டும் என்று கேட்டுக்கொண்டு கோரிக்கை மனுவினை (Memorandum) அளித்தார்.
Met with Hon'ble Prime Minister Thiru @NarendraModi to discuss the urgent situation in flood-hit areas of Tamil Nadu. Submitted a memorandum seeking funds from #NDRF to enhance ongoing rescue efforts and restore vital infrastructure. Grateful for the @PMOIndia's attention to… pic.twitter.com/7Rhn7XaaEk
— M.K.Stalin (@mkstalin) December 19, 2023
மிக்ஜம் புயல் கனமழையால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்து மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது குறித்தும், புயல் மழையால் சாலைகள், பாலங்கள், பள்ளிக் கட்டடங்கள், அரசு மருத்துவமனைகள் போன்ற பொதுக் கட்டமைப்புகளும், மின்சார உட்கட்டமைப்புகளும், உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர் கட்டமைப்புகள் கிராம சாலைகள் போன்றவைகளுக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தமிழ்நாடு அரசு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டதால் பாதிப்பிற்குள்ளான பகுதிகளில் மிக விரைவாக இயல்பு நிலை திரும்பியது குறித்தும் தமிழ்நாடு முதலமைச்சர் இந்திய பிரதமருக்கு எடுத்துரைத்தார்.
மேலும், மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் 7.12.2023 அன்று சென்னைக்கு வருகை தந்து, 'மிக்ஜம் புயல் பெருமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது குறித்தும், மத்திய அரசின் பல்துறை ஆய்வுக் குழு, 12.12.2023 மற்றும் 13.12.2023 ஆகிய நாட்களில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, அக்குழு தன்னுடன் ஆலோசனை மேற்கொண்டது குறித்தும் எடுத்துரைத்ததுடன், தமிழ்நாடு அரசு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை விரைந்து மேற்கொண்டதற்கு அக்குழு பாராட்டு தெரிவித்ததையும் குறிப்பிட்டு, சீரமைப்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக தற்காலிக நிவாரணத் தொகையாக 7,033 கோடி ரூபாயும், நிரந்தர நிவாரணத் தொகையாக 12,659 கோடி ரூபாயும் கோரப்பட்டதை தெரிவித்து, அந்நிதியினை விரைந்து ஒதுக்கீடு செய்யுமாறு இந்தியப் பிரதமரிடம், தமிழ்நாடு முதல்-அமைச்சர் கேட்டுக் கொண்டார்.
மேலும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக (டிசம்பர் 17 மற்றும் 18) பெய்த கனமழை முதல் அதிகனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து விளக்கி, அம்மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மிக்ஜம் புயல் கனமழையால் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத கனமழையால் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்பையும், தென் மாவட்டங்களில் தற்போது வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகள் இல்லாத கனமழை பெய்ததால் ஏற்பட்ட பாதிப்புகளையும் கருத்தில் கொண்டு,தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று இந்தியப் பிரதமர் மோடியிடம், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டார்.
எனவே, பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2,000 கோடி ரூபாயை அவசர நிவாரண நிதியாக வாழ்வாதார உதவிக்காகவும், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களின் தற்காலிக சீரமைப்புப் பணிகளுக்காகவும் வழங்கிட வேண்டும் என்றும் இந்தியப் பிரதமர் மோடியிடம் கோரிக்கை விடுத்தார் . இச்சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு உடனிருந்தார்” என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.