CM Stalin: ”யார் தீவிரவாதிகள்? உழவர்களா? அரசாங்கமா?” விவசாயிகள் போராட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
பா.ஜ.க அரசு, தன் சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க, போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை உருவாக்கியிருக்கிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
![CM Stalin: ”யார் தீவிரவாதிகள்? உழவர்களா? அரசாங்கமா?” விவசாயிகள் போராட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கண்டனம்! Chief Minister Stalin has written a letter for the Lok Sabha elections and farmer protest 2024 in delhi CM Stalin: ”யார் தீவிரவாதிகள்? உழவர்களா? அரசாங்கமா?” விவசாயிகள் போராட்டம் குறித்து முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/14/84f7579fe38fe32d63bbf5b5f42fb5971707905226112102_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
"இன்று உரிமை முழக்கம்! நாளை வெற்றி முழக்கம்"
மக்களவை தேர்தலுக்காக தொண்டர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மடல் ஒன்றை எழுதியிருக்கிறார். அதில், ”நாடாளும் இந்திய ஒன்றிய ஆட்சியாளர்கள் கடந்த பத்தாண்டுகளில் ஜனநாயகத்தின் வேர்களில் வெந்நீர் ஊற்றி, மக்களாட்சியின் மாண்பை முற்றிலுமாகச் சிதைத்துள்ள நிலையில், 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மக்களின் தீர்ப்பு மூலமாகத் தமிழ்நாட்டை மட்டுமின்றி, இந்தியாவைக் காக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இருக்கின்ற காரணத்தால், தேர்தல் பணிகளை விரைந்து தொடங்கிய இயக்கமாக நமது கழகம் முன்னணியில் இருக்கிறது.
‘உரிமைகளை மீட்க ஸ்டாலினின் குரல்’ என்ற தலைப்பில் ‘பாசிசம் வீழட்டும் இந்தியா வெல்லட்டும்’ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு - புதுச்சேரி நாடாளுமன்றத் தொகுதிகளில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் உரிமை முழக்கம் ஒலிக்க இருக்கிறது. நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான பொதுக்கூட்டங்கள் சிறப்பாக அமையட்டும். உரிமையின் குரல் ஓங்கி ஒலிக்கட்டும்! வெற்றி முழக்கம் திசையெட்டும் தெறிக்கட்டும்.
"மோடி, அமித்ஷாவை தூங்கவிடாமல் செய்கிறது திமுக”
தி.மு.க.வின் கொள்கை பலமும், உடன்பிறப்புகளாம் உங்களுடைய உள்ளத்தின் வலிவும் பாசிச சக்திகளை அச்சப்பட வைத்திருக்கிறது. மதவெறி அரசியல் நடத்தும் பா.ஜ.க.வைச் கருத்தியல் ரீதியாகவும் செயல்பாட்டு ரீதியாகவும் எதிர்கொள்ளக்கூடிய வலிமை மாநிலக் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்கும் உண்டு என்பதால்தான் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பா.ஜ.க.வின் தேசியத் தலைவர் நட்டா உள்ளிட்டவர்கள் எந்த மேடையில் ஏறினாலும், எந்த மாநிலமாக இருந்தாலும் தி.மு.க.வை விமர்சிக்கிறார்கள். அந்தளவுக்கு அவர்களைத் தூங்கவிடாமல் செய்கிறது திராவிட முன்னேற்றக் கழகம் எனும் பேரியக்கம்.
அவர்களுக்கே அப்படியென்றால், அந்தக் கட்சியின் மற்ற நிர்வாகிகளுக்கு ஒவ்வொரு இரவுமே தூக்கம் தொலைத்த இரவுகள்தான். பா.ஜ.க. ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் சட்ட நெருக்கடிகளை ஏற்படுத்துவதுடன், சட்டமன்றத்திலும் தனது கைப்பாவையாக உள்ள ஆளுநர்களை வைத்து நெருக்கடி தரலாம் என நினைத்து, அண்ணல் அம்பேத்கர் உருவாக்கித் தந்த அரசியலமைப்புச் சட்டத்தையே அவமதிக்கும் வகையில் செயல்பட்டு வருகிறது.
"யார் தீவிரவாதிகள்… உழவர்களா? அரசாங்கமா?”
தலைநகர் டெல்லியில் ஏன் போர்ச்சூழல் போன்ற பதற்றம் மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள்? ஒன்றிய பா.ஜ.க அரசு, தன் சொந்த நாட்டில் வாழும் உழவர்களின் வாழ்வுரிமைப் போராட்டத்தை ஒடுக்க, போர்க்களத்தைவிடக் கொடுமையான சூழலை உருவாக்கியிருக்கிறது.
மூன்று வேளாண் திருத்தச் சட்டங்களைக் கொண்டு வந்து இந்திய உழவர்களின் வயிற்றிலடித்த ஒன்றிய பா.ஜ.க அரசை எதிர்த்து ஏறத்தாழ ஓராண்டு காலம் இடைவிடாது போராடினார்கள் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த உழவர்கள். திராவிட முன்னேற்றக் கழகம் அவர்கள் பக்கம் உறுதியாக நின்றது. நாடாளுமன்றத்தில் தொடர்ச்சியாகக் குரல் எழுப்பியது. வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரியது.
அசைந்து கொடுக்க மறுத்த ஒன்றிய பா.ஜ.க. அரசு உழவர்களை ஒடுக்க நினைத்தது. அவர்களைத் தீவிரவாதிகளாகச் சித்தரித்தது. அப்போதும் உரிமைப் போராட்டத்தை ஒடுக்க முடியாத காரணத்தால், 3 வேளாண் திருத்தச் சட்டங்களைத் திரும்பப் பெற்றது. ஆனால், உழவர்களின் வாழ்வு செழிப்பதற்கான திட்டங்களை அறிவிக்கவில்லை. அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகளையும் திரும்பப் பெறவில்லை. தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி, தலைநகரில் போராட்டம் நடத்த வரும் உழவர்களுக்கு எதிராகத்தான் ஆயுதம் ஏந்திய காவலர்களும், முள்-ஆணி படுக்கைகளைப் பாதையில் விரித்துப் போட்டிருக்கும் கொடூரமும் நிகழ்ந்துள்ளது. இதில் யார் தீவிரவாதிகள்… உழவர்களா? அரசாங்கமா?.
ஒன்றிய பா.ஜ.க அரசின் உழவர்கள் விரோத வேளாண் சட்டங்களைத் தி.மு.கவும் தோழமைக் கட்சிகளும் எதிர்த்தபோது, அந்தச் சட்டங்களை ஆதரித்தது அ.தி.மு.க. பல்வேறு மதத்தினரும் ஒற்றுமையுடன் வாழும் இந்தியாவில் மதரீதியாக மக்களைப் பிளவுபடுத்தும் ஒன்றிய பா.ஜக.. அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை எதிர்த்து, சிறுபான்மை மக்களின் போராட்டங்களுக்கு முழுமையாகத் துணை நின்ற இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)