CM MK Stalin: குழப்பம் ஏற்படுத்த நினைப்பவர்களுக்கு இடமளிக்கக்கூடாது : முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை
சமூக ஊடகங்களை கண்காணித்து பொய் செய்தியை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இன்றும் நாளையும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை கண்காணிப்பாளர்கள் மாநாடு நடைபெறுகிறது.
முதல் நாளான இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் துவக்க உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “ 2 நாள் மாநாட்டில் பல்வேறு ஆலோசனைகள நடைபெற உள்ளது. மக்கள் நலன் ஒன்றை மனதில் கொண்டு ஆலோசனை வழங்க வேண்டும். பொது மக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமைதியை ஏற்படுத்தி காட்டுவது முதல் இலக்கு. பொது அமைதியை கெடுக்க நினைப்பவரை முழுமையாக தடுப்பது. அமைதியான தமிழ்நாட்டில் குழப்பம் ஏற்படுத்த முடியுமா என்று நினைப்பவர்களுக்கு இடம் அளிக்கக்கூடாது.
நாடாளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் சூழலில் அந்த உள்நோக்கத்தோடு இத்தகைய சக்திகள் செயல்பட வாய்ப்புள்ளது. அதனை தீவிரமாக கண்காணித்து தடுக்க வேண்டும். கள்ளச்சாராயம், போதைப் பொருட்களை அறவே ஒழிக்க வேண்டும். இது நம் எதிர்கால தலைமுறையை சீரழிக்கிறது. இது தொடர்பான குற்றவாளிகளை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும். மேலும் சாலை விபத்துகளில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையில் அதிகம் இருக்கும் மாநிலமாக தமிழ்நாடு இருப்பது எனக்கு மிகுந்த கவலையை அளிக்கிறது. இந்த நிலையை தவிர்க்க காவல்துறை. நெடுஞ்சாலை துறை, போக்குவரத்து துறை இணைந்து திட்டங்களை வகுக்க அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும்” என பேசியுள்ளார்.
மேலும், “சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் மக்களுக்கு சிரமமளிக்கும் ஒன்றாக இருப்பது போக்குவரத்து நெரிசல். அதனை குறைப்பதற்கு ஒரு செயல்திட்டம் உருவாக்க வேண்டும். பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகளின் நடவடிக்கை எடுப்பதில் துளியும் சமரசம் இருக்க கூடாது. குற்றவாளிகளை கைது செய்து தண்டனை வாங்கித் தருவதில் மும்மரம் காட்ட வேண்டும். பட்டியலின பழங்குடியின மக்களுக்கு எதிரான வன்கொடுமைக்கு அம்மக்கள் அச்சமின்றி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தெரிவிக்க பிரத்தியேக வாட்ஸ் அப் மற்றும் தொலைப்பேசி எண்ணை மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்து அவர்களுக்கு உதவிட வேண்டும். சமீபகாலத்தில் தூத்துக்குடி மாவட்ட மொறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் லூர்த் பிரான்ஸிஸ் மற்றும் திருச்சி மாவட்ட சிறப்பு உதவி காவல் ஆணையர் பூமி நாதன் ஆகியோரின் கொலை வழக்குகளில் காவல்துறை விரைவாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தந்தது பாராட்டுக்குரியது” என்று கூறி முதலமைச்சர் பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், “தற்போதைய காலக்கட்டத்தில் உண்மைக்கு புரம்பான செய்திகளை பரப்புவதில் சமூக ஊடகங்களின் தாக்கம் அதிகமாக உள்ளது. எனவே மாவட்ட ஆட்சி தலைவர்களும் காவல் கண்காணிப்பாளர்களும் சமூக ஊடகங்களை தொடர்ந்து கண்காணித்து பொய் செய்திகளை பரப்புவோர் மீதும் சமூக ஒற்றுமைக்கு குந்தகம் விலைவிப்போர் மீதும் கடுமையான நடவடிக்கை எடுப்பதோடு அதற்குறிய உண்மை நிலையை சமூக ஊடகங்களில் தெளிவுப்படுத்த வேண்டும். நான் இந்த கூட்டத்தில் குறிப்பிட்ட ஆலோசனைகள் பற்றியும் இதனை தாண்டியும் பல்வேறு நடவடிக்கைகளை குறித்தும் அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களை சேரும் வகையிலும் உங்கள் கருத்துக்களை இங்கு வழங்க வேண்டும். மாவட்ட நிர்வாகம் மற்றும் சட்டம் ஒழுங்கு தொடர்பான கருத்துக்களை முன்வைக்க வேண்டும் ” என குறிப்பிட்டு பேசினார்.