CM Stalin: ”மாநில பாடத்தில் பயில்பவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை" நிகர்ஷாஜிக்கு முதலமைச்சர் பாராட்டு மழை..!
ஆதித்யா-எல் 1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர்ஷாஜியை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன் என்று வாழ்த்தியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்.
CM Stalin: ஆதித்யா-எல் 1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர்ஷாஜியை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன் என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ஆதித்யா எல் 1:
இஸ்ரோவில் தொடர்ந்து தமிழர்கள் பல்வேறு சாதனைகளை படைத்து வருகின்றனர். சந்திரயான் 3 வெற்றி பெற்றதை மக்கள் கொண்டாடி வந்தனர். அந்த திட்டத்திற்கு தமிழகத்தைச் சேர்ந்த வீரமுத்துவேல் திட்ட இயக்குநராக செயல்பட்டிருந்தார். அவரை தமிழக மக்கள் கொண்டாடித் தீர்த்தனர். அந்த வகையில் தற்போது சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 திட்ட பணி இயக்குநராக தென்காசியைச் சேர்ந்த பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜி பணியாற்றி இருக்கிறார். பெண் விஞ்ஞானி நிகர் ஷாஜிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
முதலமைச்சர் பாராட்டு:
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில், "தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான ஆதித்யா எல்-1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி நிகர் ஷாஜியை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன். தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில் பயில்பவர்கள் திறத்திலும் தரத்திலும் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்பதைத் தொடர்ந்து சந்திரயான் முதல் ஆதித்யா வரை நம் சாதனைத் தமிழர்கள் நிரூபித்துக் கொண்டே இருக்கின்றனர்.
இஸ்ரோவின் பெருமைமிகு திட்டத்துக்கு நிகர் சாஜி தலைமைப் பொறுப்பேற்றிருப்பதைப் பார்த்து அவர்கள் குடும்பத்தினர் எத்தகைய பூரிப்பை, பெருமையை அடைந்திருக்கிறார்களோ அதே அளவுக்கு நானும் பெருமிதம் கொள்கிறேன்” என்றார் முதலமைச்சர் ஸ்டாலின்.
தென்காசி மாவட்டத்தின் செங்கோட்டையில் பிறந்து, சூரியனை ஆய்வுசெய்யும் இந்தியாவின் முதல் விண்கலமான #AdityaL1 திட்ட இயக்குநராக உயர்ந்து சாதித்துள்ள தமிழ்ப் பெண்மணி #NigarShaji அவர்களை அகமகிழ்ந்து பாராட்டுகிறேன்.
— M.K.Stalin (@mkstalin) September 3, 2023
தமிழ்நாட்டின் மாநில அரசுப் பள்ளி, கல்லூரி, பாடத்திட்டத்தில்… https://t.co/xjJaQjTxwm
இஸ்ரோ படைக்கும் பல சாதனைகளுக்கு தமிழகர்கள் தலைமை வகித்து வருகின்றனர். மயில்சாமி அண்ணாதுறை முதல் சிவன், வளர்மதி, வீரமுத்துவேல் ஆகியோரை தொடர்ந்து தற்போது நிகர் சாஜியும் இந்தப் பட்டியலில் இணைந்திருக்கிறார்.
ஆதித்யா எல்-1:
சூரியனை ஆய்வு செய்யும் நோக்கிலான ஆதித்யா எல்1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த விண்கலம் விண்ணில் செலுத்தப்பட்டது. தொடர்ந்து, சுமார் 125 நாட்கள் சூரியனை நோக்கி பயணித்து, பூமியிலிருந்து 15 லட்சம் கிலோ மீட்டர் தூரத்தில் நிலை நிறுத்தப்பட உள்ளது.
அங்கிருந்து சூரியன் தொடர்பான பல்வேறு ஆய்வுகளை ஆதித்யா எல்.1 விண்கலம் செய்ய உள்ளது. 1,485 கிலோ எடை கொண்ட ஆதித்யா எல்1 விண்கலம் சூரியனின் வெப்பசூழல், கதிர்வீச்சு உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. ஜப்பான், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய கூட்டமைப்பு நாடுகள் மட்டுமே இதுவரை சூரியனை ஆய்வு செய்ய விண்கலங்களை அனுப்பியுள்ளன. அந்த வரிசையில் தற்போது இந்தியாவும் இணைந்துள்ளது. அதோடு, நிலவு மற்றும் செவ்வாய் கிரகத்தை தொடர்ந்து சூரியனையும் ஆய்வு செய்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.