(Source: ECI/ABP News/ABP Majha)
தென் மாவட்டங்களில் தொடர் கனமழை.. கன்னடியன் கால்வாயில் நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு..
தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கன மழைக்கு வாய்ப்பு. தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்டத்தில் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
தமிழகத்தில் இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை, மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
அதிகனமழை பெய்யும் என ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள இந்த 4 மாவட்டங்களுக்கு 100 பேர் அடங்கிய தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் விரைந்துள்ளனர்.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் நெல்லை மாவட்டத்தில் வேகமாக அணைகள் நிரம்பி வருகின்றன. பாபநாசம், சேர்வலாறு மற்றும் மணிமுத்தாறு அணைகள் நிரம்பி வருகின்றன. பாபநாசம் அணையின் கொள்ளளவில் 90.55% நிரம்பியுள்ளது. பாபநாசம் அணையின் மொத்த உயரமான 143 அடியில் 134.60 அடி அளவு நிரம்பியது. சேர்வலாறு அணையின் நீர்மட்டம் 85.64 நிரம்பியது.
மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவில் 62.46% அளவு உயர்ந்துள்ளது. பாபநாசம், சேர்வலாறு அணைகளில் இருந்து 17 ஆயிரம் கன அடி நீர் திறக்கப்படுகிறது. இரண்டு அணைகளில் இருந்து படிப்படியாக 35,000 கன அடி நீர் வரை திறக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். மேலும் தாமிரபரணி கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நெல்லையில் தொடர்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக அரசு மருத்துவமனை, பேருந்து நிலையம் போன்ற இடங்களில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. டவுண், பேட்டை போன்ற பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் பொதுமக்களின் இயல்பு வாழக்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பாளையங்கோட்டை பகுதியிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. தாழையூத்து, தச்சநல்லூர் பகுதிகளிலும் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. மேலும் பெருமாள் புரம், வி.எம் சத்திரம் பகுதிகளில் மின்கம்பம் மீது மரம் சாய்ந்ததால் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
தாமிரபரணியாறு-கறுமேனியாறு-நம்பியாறு நதி நீர் இணைப்புத் திட்டம் சோதனை ஓட்டமாக தண்ணீர் திறக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் கன்னடியன் கால்வாயில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது.
மேலும் படிக்க
தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு இணைப்புத் திட்டம்; சோதனையோட்டம் நடத்த முதலமைச்சர் உத்தரவு