சென்னை வாசிகள் சொந்த ஊருக்கு படையெடுப்பு! போக்குவரத்து நெரிசல் உச்சம் !
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு திரும்புவதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை 1,14,654 வாகனங்கள் கடந்து சென்றன.

விழுப்புரம்: தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு சென்னையிலிருந்து தென் மாவட்டங்களுக்கு திரும்புவதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியை 5 கிலோ மீட்டர் தூரம் வரை வாகனங்கள் நின்று செல்கின்றன. சுங்கச்சாவடியை 1,14,654 வாகனங்கள் வாகனங்கள் கடந்து சென்றுள்ளன.
திணறும் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி
3 நாட்களில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்ளுக்கு புறப்பட்டுச் சென்றனர்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த 3 நாட்களில் 14 லட்சத்துக்கும் மேற்பட்டோர் சொந்த ஊர்ளுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதனால், பேருந்து, ரயில் நிலையங்களில் கூட்டம் அலைமோதியது. சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தீபாவளியை முன்னிட்டு சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களில் வசிப்போர் சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக கடந்த 16-ம் தேதி முதல் தமிழக போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நேற்று முன்தினம் வரை சுமார் 3.50 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு அரசு பேருந்துகள் மூலமாகப் பயணித்தனர்.
தீபாவளிக்கு ஒருநாள் மட்டுமே உள்ள நிலையில், நேற்று பெரும்பாலான தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிட்டோர் சொந்த ஊர்களுக்குப் புறப்பட்டனர். ஆங்காங்கே சாரல் மழை பெய்தது. அதையும் பொருட்படுத்தாமல், புத்தாடை, இனிப்பு வாங்க கடைவீதிகளில் மக்கள் குவிந்ததால், சென்னையின் முக்கிய சாலைகள் பரபரப்பாக காணப்பட்டன. இதேபோல, கோவை, திருப்பூர், திருச்சி, சேலம் உள்ளிட்ட நகரங்களில் இருந்தும் ஏராளமானோர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். வழக்கமான ரயில்கள் தவிர, சிறப்பு ரயில்களும் இயக்கப்பட்டன. அனைத்து வாகனங்களிலும் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது.
சென்னையில் கிளாம்பாக்கம், கோயம்பேடு, மாதவரம் உள்ளிட்ட பேருந்து நிலையங்களில் இருந்து வெளியூர்களுக்கு சிறப்பு பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டன. கடும் போக்குவரத்து நெரிசல் காரணமாக கிளாம்பாக்கத்துக்கு சிறப்புப் பேருந்துகள் வருவதில் தாமதம் நிலவியது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்தனர். சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் அரசு, தனியார் அலுவலகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் பணியாற்றுவோர், உயா்கல்விப் பயில்வோர் போன்றோர் தங்களின் சொந்த ஊா்களுக்கு வெள்ளிக்கிழமை பிற்பகல் முதல் புறப்படத் தொடங்கினா்.
திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
இதன் காரணமாக திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கின. வெள்ளிக்கிழமை இரவைத் தொடா்ந்து, சனிக்கிழமை காலையில் இந்த வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. சனிக்கிழமை மாலையில் தென் மாவட்டங்கள், மத்திய மாவட்டங்கள் உள்ளிட்ட இதர மாவட்டங்களுக்குச் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்த நிலையில், போக்குவரத்து நெரிசலும் ஏற்படத் தொடங்கியது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் ஜக்காம்பேட்டை, விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், முத்தாம்பாளையம் பிரிவுச் சாலை, இருவேல்பட்டு, அரசூா் ஆகிய 6 இடங்களில் மேம்பாலக் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருவதால், இப்பகுதிகளில் வாகனங்கள் அணுகுச்சாலையில் செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்ததால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தன.
இதேபோன்று விக்கிரவாண்டி சுங்கச்சாவடிப் பகுதியிலும், அருகாமைப் பகுதியிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நீண்ட தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதையடுத்து போக்குவரத்து போலீஸார் நெரிசலை சரி செய்து வாகனங்களை அனுப்பி வைத்தனா். விழுப்புரம் மாவட்டத்தின் எல்லைக்குள்பட்ட பகுதிகளிலும், நெரிசல் ஏற்படும் பகுதிகளிலும் போலீஸார் பணியில் ஈடுபடுத்தப்பட்டு, போக்குவரத்தை சீரமைத்தனா். இதுபோன்று விழுப்புரம் நகரத்தின் பல்வேறு பகுதிகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில், ஆங்காங்கே போலீஸார், போக்குவரத்து சரி செய்யும் பணியை மேற்கொண்டனா்.





















