சென்னையின் அடையாளம்.. புதுப்பொலிவுடன் வள்ளுவர் கோட்டம்.. மக்கள் வியக்கும் அளவுக்கு இத்தனை வசதிகளா?
தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டு 20,000 சதுர அடி பரப்பளவில் 1.548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட பிரம்மாண்டமான "அய்யன் வள்ளுவர் கலையரங்கம்" மேம்படுத்தப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் கடந்த 1974, 1975 ஆகிய ஆண்டுகளில் நிர்மாணிக்கப்பட்டது சென்னை மாநகரின் அடையாளமாக திகழும் வள்ளுவர் கோட்டம். இந்த வள்ளுவர் கோட்டம் சுற்றுலா மையமாக எழுச்சிபெற்று உலகத் தமிழ் அறிஞர்களாலும், தமிழ்நாட்டு மக்களாலும் பெரிதும் பாராட்டப்படுகிறது.
சென்னையின் அடையாளம் வள்ளுவர் கோட்டம்:
வள்ளுவர் கோட்டத்தின் முன் நிறுவப்பட்டுள்ள அண்ணாவின் திருவுருவச் சிலைக்கு அவருடைய பிறந்தநாளின்போது மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதற்காக தற்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்றபோது, வள்ளுவர் கோட்டத்தின் உள்ளே சென்று பார்வையிட்டார்.
அப்போது, முந்தைய 10 ஆண்டுகால ஆட்சியில் பராமரிக்கப்படாமல் பாழ்பட்டிருந்த வள்ளுவர் கோட்டத்தின் தோற்றத்தைப் பார்த்து மிகவும் நொந்து வேதனைக்கு ஆளானார்கள். இதனைத் தொடர்ந்து தலைமைச் செயலகம் வந்தபின், அதிகாரிகளை அழைத்து வள்ளுவர் கோட்டத்தைப் புதுப்பித்திட வேண்டும் என்ற உணர்வோடு திட்டமிட்டு ரூ. 80 கோடி மதிப்பீட்டில் புனரமைப்புப் பணிகள் நடைபெறும் என்று அறிவித்து நிதி ஒதுக்கீடு செய்தார்கள்.
"அய்யன் வள்ளுவர் கலையரங்கம்"
அதன் பயனாக, வள் வள்ளுவர் கோட்டம் புதுப்பிக்கப்பட்டு எழிற்கோலம் கொண்டுள்ளது. தமிழ்ப் பண்பாட்டு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்துவதற்குத் தக்க வகையில் வடிவமைக்கப்பட்டு 20,000 சதுர அடி பரப்பளவில் 1.548 இருக்கைகளுடன் அதிநவீன வசதிகளுடன் குளிரூட்டப்பட்ட பிரம்மாண்டமான "அய்யன் வள்ளுவர் கலையரங்கம்" மேம்படுத்தப்பட்டுள்ளது.
முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உரை விளக்கத்துடன் 1,330 திருக்குறள்களையும் கொண்ட குறள் பலகைகள் அமைக்கப்பட்டு ஓவியங்களுடன் புதிய வடிவம் பெற்றுள்ளது "குறள் மணிமாடம்". 100 பேர் அமரும் வசதியுடன் "திருக்குறள் ஆய்வரங்கம் மற்றும் ஆராய்ச்சி-I நூலகம்" இலக்கிய விவாதங்கள் ஆவணப்பதிவு மற்றும் கல்வி ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மக்கள் மிரண்டு போகும் அளவுக்கு இத்தனை வசதிகளா?
27,000 சதுர அடி பரப்பில் தரை நிலை, தரையின் கீழ் நிலப்பகுதிகளில் 162 கார்கள் வரை நிறுத்துவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வள்ளுவர் கோட்டத்தைப் பார்வையிட வருகைபுரியும் பொதுமக்களுக்குப் பயன்படும் வகையில் 3,336 சதுர அடியில் உணவகம் அமைக்கப்பட்டுள்ளது.
உணவகப் பகுதியில் 72 பேர் அமரவும், காபி அருந்தும் பகுதியில் 24 பேர் அமரக் கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. 275.56 சதுர அடி பரப்பளவு கொண்ட நினைவுப் பொருள் மற்றும் பரிசுப் பொருள்களுக்கான விற்பனையகமும் அருகே அமைக்கப்பட்டுள்ளது.
திருவள்ளுவர் சிலையை நோக்கிப் பார்வையாளர்கள் தடையின்றிச் செல்வதற்கு வசதியான மூடிய நடைபாதையுடன் கூடிய "வேயா மாடம்" ஏற்படுத்தப்பட்டுள்ளது. திருவாரூர்த் தேர் வடிவில் 106 அடி உயரமுடைய திருக்குறள் கருத்துகளை விளக்கும் சிற்பங்கள் நுட்பமான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ள கல் தேர் ஒலி-ஒளி தொழில்நுட்பத்தில் மிளிரும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது.
பார்வையிடும் பொதுமக்கள் உள்ளம் மகிழும் வகையில் இசை நீரூற்றுகளும் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மகத்தான முறையில் புனரமைப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ள வள்ளுவர் கோட்டம் நாளை மாலை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினால் திறந்துவைக்கப்படுகிறது.





















