Koyambedu Market Complex: கோயம்பேடு சந்தையில் வரவிருக்கும் அதிரடி மாற்றங்கள்... தமிழக அரசின் அசத்தல் முடிவு
சென்னையில் உள்ள கோயம்பேடு மொத்த சந்தை முழுவதும் விரைவில் சூரிய மின்சக்தியில் இயங்க உள்ளது.
சென்னையில் உள்ள கோயம்பேடு மொத்த சந்தை முழுவதும் விரைவில் சூரிய மின்சக்தியில் இயங்க உள்ளது. கோயம்பேடு சந்தையை முழுமையாக பிளாஸ்டிக் இல்லாத இடமாக மாற்றவும் தமிழக சுற்றுச்சூழல் துறை திட்டமிட்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் உடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய சந்தைகளில் ஒன்று கோயம்பேடு சந்தை. இங்கு காய்கறிகள், பழங்கள், பூக்கள், தானியங்கள் கடை உள்ளிட்ட 3,900 கடைகள் உள்ளன. குறிப்பாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. தினந்தோறும் ஆயிரக்கணக்கான வணிகர்களும் பொதுமக்களும் வந்து செல்கின்றனர்.
இதையும் வாசிக்கலாம்: Greenfield Universities: தமிழகத்தில் 6 பசுமை பல்கலைக்கழகங்களுக்கு அரசு ஒப்புதல்; முழு விவரம்..
மொத்த விற்பனை
மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.
இங்கு தினந்தோறும் சுமார் 200 டன்கள் அளவுக்கு காய்கறிக் கழிவுகள் உருவாகின்றன. இதில் பெரும்பான்மையான கழிவுகள் வாழைப்பழத் தோல்தான். இவை அனைத்தும் முன்னதாக சென்னை மாநகராட்சிக்கு, கழிவுகளாக அனுப்பப்பட்டிருந்தன. விரைவில் உருவாக்கப்படும் பயோ மீத்தேன் ஆலை மூலம் கழிவுகள் அனைத்தும் பசுமை வாயுவாக மாற்றப்பட்டு, அதில் இருந்து மின்சாரம் தயாரிக்கப்படும் என்று சுற்றுச்சூழல், வனத்துறை செயலர் சுப்ரியா சாஹு தெரிவித்துள்ளார்.
இதற்கான தொழில்நுட்பத்தை ஐஐடி மெட்ராஸ் தயாரித்து வழங்கும். இதில் மாநில சுற்றுச்சூழல், வனத்துறை மற்றும் காலநிலை மாற்றத் துறை இணைந்து செயல்படும்.
பிளாஸ்டிக் இல்லாத சந்தை
அதேபோல கோயம்பேடு சந்தையை 100 சதவீதம் பிளாஸ்டிக் இல்லாத சந்தையாக மாற்றவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. இதன்படி, சுற்றுச்சூழல் துறை சார்பில் துணிப் பைகளை (மஞ்சப்பை) பெறும் இயந்திரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. மாநிலம் முழுவதும் பல்வேறு சந்தைகளில் மஞ்சப்பைகளை நிறுவும் 20 இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
அதேபோல கோயம்பேடு சந்தையில் பயன்படுத்தப்படும் மின்சாரத்தின் அளவைக் குறைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது. சூரிய மின்சக்தி உள்ளிட்ட பசுமை மின் சக்திகளின் பயன்பாடு அதிகரிக்கப்பட உள்ளது. அதேபோல கழிவுகள் மறு சுழற்சி செய்யபட்டு, மீண்டும் உபயோகப்படுத்தப்பட உள்ளன.
இதையும் வாசிக்கலாம்: Kendriya Vidyalaya Admission: கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் முதல்முறையாக மழலையர் வகுப்புகள் தொடக்கம்; முழு விவரம்