செந்தில்பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதமா? - சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு - அடுத்தது என்ன?
செந்தில்பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
சட்ட விரோத காவலில் செந்தில்பாலாஜி வைக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பை வழங்கியுள்ளனர். அதில் அமைச்சர் செந்தில்பாலாஜியை கைது செய்தது சட்டவிரோதம் என ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். செந்தில்பாலாஜியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என நீதிபதி நிஷா பானு தீர்ப்பு வழங்கியுள்ளார்.
மற்றொரு நீதிபதியான பரத சக்ரவர்த்தி செந்தில்பாலாஜியை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதனால் மாறுபட்ட தீர்ப்பாக அமைந்துள்ளது. இதையடுத்து ஆட்கொணர்வு வழக்கு 3வது நீதிபதி விசாரணைக்காக தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
வழங்கப்பட்ட மாறுப்பட்ட கருத்து என்ன..?
நீதிபதி பரத சக்ரவர்த்தி தீர்ப்பு:
காவேரி மருத்துவமனையில் செந்தில்பாலாஜிக்கு சிகிச்சையை தொடரலாம். மருத்துவர்கள் ஒப்புதல் அளிக்கும் வரை காவேரி மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கலாம். சிகிச்சை முடிந்தபின் சிறை மாற்றம் அல்லது அரசு மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைக்கலாம்.
சிகிச்சையில் இருக்கும் நாட்களை நீதிமன்ற காவல் நாட்களாக எடுத்துக்கொள்ள முடியாது. உடல்நலம் சரியான பிறகு செந்தில் பாலாஜியை காவலில் எடுத்து விசாரிக்கலாம்.
நீதிபதி நிஷா பானு தீர்ப்பு:
மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு ஏற்கக்கூடியதே, அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கலாம். செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது சட்டவிரோதம்.
செந்தில் பாலாஜி வழக்கு விவரம்:
கடந்த 2011 முதல் 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தார் செந்தில் பாலாஜி. அப்போது தனது நட்பு வட்டாரம் மற்றும் உறவினர்களிடம் போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்டவர்கள் அமைச்சர் செந்தில் பாலாஜி மீது புகார் அளித்தனர்.
இதையடுத்து மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் மற்றும் சிபிசிஐடி காவல்துறையினர் செந்தில் பாலாஜி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கப்பதிவு செய்தனர். அந்த வழக்கானது தொடர்ந்து நிலுவையில் இருந்த நிலையில், கடந்த 2021ம் ஆண்டு அமலாக்கத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்தது.
செந்தில் பாலாஜி மீது மேலும் ஒரு வழக்கு:
அமைச்சர் செந்தில் பாலாஜி மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே, பணமோசடி பிரிவில் 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வரும் நிலையில், தற்போது புதிதாக ஊழல் தடுப்பு பிரிவும் இணைக்கப்பட்டுள்ளது.