Chennai High Court: ஜோதிடம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த உத்தரவிட முடியாது - சென்னை உயர்நீதிமன்றம்
ஜோதிடத்தை நம்புவது, கற்பனை செய்வது, அதுகுறித்து சிந்திப்பது ஆகியவை மக்களின் தனிப்பட்ட சுதந்திரமாகும்.
பல இளைஞர்களின் வாழ்க்கையை ஜோதிடம் பாதிக்கும் என்பதால், அதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த கோரிய வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
ஜோதிடம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்பதால் அதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழ்நாடு அரசுக்கும், இஸ்ரோவுக்கும் உத்தரவிடக்கோரி ஹேமராஜ் என்பவார் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், ‘ஜோதிடம் அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை. ஆனால் இளைஞர்கள் முதல் வயதானவர்கள் வரை ஜோதிடத்தை நம்பி திருமணம், தொழில் உள்ளிட்டவற்றைச் செய்து பலர் பாதிக்கப்படுகின்றனர், மூடநம்பிக்கையால் பலர் குற்றவாளிகளாகவும், போதைக்கு அடிமையானவர்களாகவும் ஆகின்றனர். பலர் தற்கொலை, கொலை மற்றும் விவாகரத்தும் செய்கின்றனர். எனவே, ஜோதிடத்தை நம்ப வேண்டாம் என மீடியாக்கள் மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி பிடி ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணை வந்தது. அப்போது, மூட நம்பிக்கைகளுக்கு எதிராக மனுதாரர் மேற்கொண்டுள்ள முயற்சி பாராட்டத்தக்கது. இருப்பினும், ஜோதிடம் தனிநபர் நம்பிக்கை சம்பந்தப்பட்டது என்பதால், மனுதாரர் கோருவது போல எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது. அதேவேளையில், ஜோதிடம் மட்டுமல்ல அறிவியலே இன்னும் முழுமையாக நிரூபிக்கப்படவில்லை. இத்தனை ஆண்டுகாலமாக கிரகமாக இருந்த புளூட்டோ, தற்போது கிரகம் என்ற தகுதியை இழந்துவிட்டது.
பிரபஞ்சம் உருவானது குறித்த அறிவியல் என்பது தொடக்க நிலையிலேயே உள்ளது. அண்டம் தொடர்பான பல கேள்விகளுக்கு இன்னும் விடை காண முடியவில்லை. எனவே, மனுதாரர் கோரிக்கையை ஏற்க முடியாது. ஜோதிடத்தை நம்புவது, கற்பனை செய்வது, அதுகுறித்து சிந்திப்பது ஆகியவை மக்களின் தனிப்பட்ட சுதந்திரமாகும். அதேவேளை, மக்களைக் பாதுகாக்க வேண்டிய அரசு, மூடநம்பிக்கை போன்ற தீமைகளைக் களைய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனக் கூறிய நீதிபதிகள் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
ABP EXCLUSIVE: வியர்வையில் சார்ஜ் ஆகும் பேட்டரி - தமிழ் விஞ்ஞானி குருநாதனுடன் நேர்காணல் (பகுதி - 2)
Vadivelu News: தடை நீங்கியது மகிழ்ச்சி.. இது எனக்கு மறுபிறவி.. வடிவேலு நெகிழ்ச்சி