(Source: ECI/ABP News/ABP Majha)
Goondas : மாணவி ரயில் முன் தள்ளி கொலை...இளைஞருக்கு குண்டர் சட்டத்தில் சிறை ...பிழையால் ரத்தான உத்தரவு
கல்லூரி மாணவியை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட சதீஷ் என்பவரை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
இளம் பெண்ணை ரயில் முன் தள்ளி கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட பரங்கிமலை சதீஷை குண்டர் சட்டத்தில் அடைத்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கிண்டியை அடுத்த ஆதம்பாக்கம் பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்பவர், அதே பகுதியைச் சேர்ந்த 2ஆம் ஆண்டு கல்லூரி மாணவி சத்யா என்பவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் பரங்கிமலை ரயில் நிலையத்தில் நின்று பேசிக்கொண்டு இருந்த போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு சண்டை நடந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த சதீஷ், பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து கொண்டிருந்த மின்சார ரயிலில் சத்யாவை தள்ளிவிட்டுள்ளார். இதில் சத்யா உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல் நிலையத்தினர், சதீஷை கைது செய்து, சிறையில் அடைத்தனர். இந்நிலையில், சதீஷை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து சதிஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சுந்தர் மற்றும் ஆர்.சக்திவேல் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, சதீஷ் தரப்பில், கைது உத்தரவில் செப்டம்பர் 27 என தமிழிலும், அக்டோபர் 13 என ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டுள்ளது, முரணாக இருப்பதாக சுட்டிக்காட்டி வாதிடப்பட்டது. இதற்கு காவல்துறை தரப்பில் போதிய விளக்கம் தராத நிலையில், கைது செய்தது தொடர்பான குறிப்பாணையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உள்ள தகவலில் முரண்பாடு இருப்பதன் காரணமாக பரங்கிமலை சதீஷ் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
முன்னதாக மாணவி சத்யா ரயில் முன் தள்ளி கொலை செய்யப்பட்டதை அடுத்து, மகள் இறந்த துக்கம் தாளாமல், சத்யாவின் தந்தை மாணிக்கம், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். சத்யாவின் தாய் ராமலட்சுமி தனது மற்ற 2 மகள்களுடன் சேர்ந்து, தனது கணவர் மாணிக்கம் மற்றும் மகள் சத்யா ஆகியோரின் உடல்களுக்கு இறுதிச் சடங்கு செய்தார். இந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த சத்யாவின் தாய் ராமலட்சுமி , கடந்த பிப்ரவரி மாதம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பரங்கிமலை காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகப் பணிபுரிந்து வந்த ராமலட்சுமி, நீண்ட நாட்களாக தனது மகளின் இழப்பை தாங்க முடியாமல் இருந்து வந்தார்.