Case Against DGP: தமிழக டி.ஜி.பி மீது அவமதிப்பு வழக்கு.. உயர்நீதிமன்றம் கறார்... நடந்தது என்ன?
தமிழக டிஜிபி உள்ளிட்ட 9 காவல் அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் திங்களன்று விசாரணை தொடங்கியது.
தமிழக டிஜிபி உள்ளிட்ட 9 காவல் அதிகாரிகள் மீது அவமதிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் திங்களன்று விசாரனை தொடங்கியது.
தமிழக காவல்துறை இயக்குநர் (டிஜிபி) மற்றும் அவருக்குக் கீழ் பணிபுரிந்த ஒன்பது அதிகாரிகள், கைது நடவடிக்கையின்போது உச்சநீதிமன்றம் வகுத்துள்ள கொள்கைகளை அவர்கள் கடைப்பிடிக்கத் தவறியதைக் கண்டறிந்த சென்னை உயர்நீதிமன்றம், அவர்கள் மீது அவமதிப்பு வழக்குத் தொடர்ந்தது.
நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு அடிப்படையில் 10 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார். டி.கே.பாசு வழக்கில் உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளைக் குறிப்பிட்டு, அதிகாரிகள் செய்தது civil contempt என்பதால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இந்த நீதிமன்றத்தின் முன் பட்டியலிட உத்தரவிடப்பட்டுள்ளது என்று நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் மேலும் கூறினார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த எஸ் ராஜரத்தினம் பல்வேறு நீதிமன்றங்களில் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஏராளமான வழக்குகளை தொடுத்தவர். நவம்பர் 3, 2015, அவர் சில வழக்குத் தாள்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அவரது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தபோது, போலீசார் அவரது வீட்டிற்கு வலுக்கட்டாயமாக நுழைந்து, எந்த முன் அறிவிப்பு இல்லாமல் அவரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரது மனைவியும் மற்றும் மகளும் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானார்கள்.
கைது செய்யப்பட்ட ராஜரத்தினம் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். பின் காயமடைந்த அவருக்கு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டப்பட்டது. இதனை தொடர்ந்து ராஜரத்தினம் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் தன்னை கைது செய்து தடியடி நடத்திய போலீசார் மீது உரிய துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். மனு நிலுவையில் இருந்தபோது, அவர் இறந்துவிட்டதால், அவரது சட்டப்பூர்வ வாரிசுகள் வழக்கைத் தொடர அனுமதிக்கப்பட்டனர்.
கூடுதல் அட்வகேட் ஜெனரல், மனுதாரரின் வாதங்களை ஆட்சேபித்து, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எந்த குறையும் இல்லாமல் தொடங்கப்பட்டதாகக் கூறினார். டிஜிபி மற்றும் துணை அதிகாரி ஆகியோர் சம்பந்தப்பட்ட போலீசாரை சஸ்பெண்ட் செய்து விசாரணை நடத்தி முடித்தனர். ஆர்.டி.ஓ., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு, அதன்பின், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, விசாரணை நடத்தி, ஒரு வாரத்துக்கு முன், நவம்பர், 7ஆம் தேதி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த 5 ஆண்டுகளாக துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை என்று நீதிபதி சுட்டிக்காட்டினார். தமிழ்நாடு காவல்துறை துணைப்பணிகள் (ஒழுங்கு மற்றும் மேல்முறையீடு) விதிகளின் கீழ் இதுவரை குற்றப்பத்திரிகை எதுவும் வழங்கப்படவில்லை மற்றும் இறுதி உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை.
"இந்த நீதிமன்றத்தின் முன் வைக்கப்பட்டுள்ள பதிவுகளை ஆய்வு செய்தால், காவல்துறை அதிகாரிகளின் அணுகுமுறை அலட்சியமாகவும் நீண்ட கால தாமதம் சாதகமாகவும் எடுத்துக் கொள்ளப்படுகிறது. தற்போது வரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நடைமுறையில் உள்ள சட்டம் மற்றும் விதிகளின்படி தொடரப்படவில்லை. ." என குறிப்பிட்டு மெமோ வழங்கப்பட்டது.
"நீண்ட ஆண்டுகளாக இந்த விவகாரத்தை நிலுவையில் வைத்திருப்பதன் மூலம், அதிகாரிகளின் பிரச்சினைகளை புதைக்க முடியும் என்று கருத கூடாது. பொது அதிகாரிகள் சட்டத்தின் கீழ் விரைவாக செயல்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உச்சநீதிமன்றம்/சட்ட விதிகளை மீறும் அதிகாரிகள்/காவல்துறை அதிகாரிகள், சட்ட விதிகளை பின்பற்ற வேண்டும். செயலற்ற தன்மை பொது களத்தில் உள்ள அமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்க நேரிடும், ”என்று நீதிபதி கூறி அவமதிப்பு நடவடிக்கைகான விசாரணை தொடங்கி வைத்தார்.