(Source: ECI/ABP News/ABP Majha)
ஃபார்முலா 4 கார் பந்தயம் நடத்த முதற்கட்ட அனுமதி.. எப்போது தொடங்குகிறது? பயங்கர வெயிட்டிங்!
சென்னை ஃபார்முலா 4 கார் பந்தய போட்டி தொடங்க சில மணி நேரங்களே உள்ள நிலையில், பந்தயம் நடத்த முதற்கட்ட FIA அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் போட்டி மற்றும் இந்தியன் ரேஸிங் லீக் கார் பந்தயம் இன்று தொடங்க உள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியாவில் முதல் இரவு நேர ஸ்ட்ரீட் சர்க்யூட் பந்தயம் நடத்தப்பட உள்ளது. தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (SDAT) மூலம் தமிழ்நாடு அரசு நடத்துகிறது.
சென்னை ஃபார்முலா 4க்கு முதற்கட்ட அனுமதி: போட்டி தொடங்க சில மணி நேரங்களே உள்ள நிலையில், பந்தயம் நடத்த முதற்கட்ட FIA அனுமதி கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது, பாதுகாப்பு சோதனை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மாலை 6 மணிக்குள் கார் பந்தயம் நடத்த சான்றிதழ் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாதுகாப்பு சோதனை முடிந்து இரவு 7 மணிக்குள் மெயின் பந்தயம் தொடங்க உள்ளது.
எதிர்பார்ப்பை எகிற வைத்த பந்தயம்: தெற்காசியாவிலேயே இரவு ஃபார்முலா 4 ஸ்ட்ரீட் பந்தயத்தை நடத்தும் முதல் நகரமாக சென்னை திகழ்கிறது. 3.5 கிமீ சுற்றளவு கொண்ட சர்க்யூட்டில் இப்பந்தயம் நடத்தப்படுகிறது. தீவு திடல், போர் நினைவுச்சின்னம், நேப்பியர் பாலம், சுவாமி சிவானந்தா சாலை மற்றும் மவுண்ட் ரோடு ஆகியவற்றில் இந்த சர்க்யூட் அமைந்துள்ளது. இது தெற்காசியாவிலேயே மிக நீளமான ஸ்ட்ரீட் சர்க்யூட் எனபது குறிப்பிடத்தக்கது.
கார் பந்தயம் செல்வோர் கவனத்திற்கு:
கார் பந்தய போட்டியை பார்க்க செல்லும் பார்வையாளர்கள் எடுத்த செல்ல கூடாத பொருள்கள் பற்றிய விவரங்களை தெரிந்து கொள்வோம். பிறருக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய எந்தப் பொருளும் அரங்கிற்குள் அனுமதிக்கப்படாது. இந்த பொருட்களை சேமிப்பதற்கான எந்த ஏற்பாடும் இல்லை. மேலும் அவை அனைத்தும் பாதுகாப்பு சோதனைச் சாவடிகளில் பறிமுதல் செய்யப்படும். அவை திரும்பத் தரப்படமாட்டது.
கூர்மையான பொருள்கள்: பிளேடுகள். கத்திகள், கத்தரிக்கோல், ஆயுதங்கள். பாக்கெட் கத்திகள், பெப்பர் ஸ்பிரே, பெரிய சங்கிலிகள் போன்றவை.
ஆயுதங்கள்: துப்பாக்கிகள், கத்திகள், சுவிஸ் இராணுவ கத்திகள் போன்றவை
விலங்குகள் மற்றும் செல்லப்பிராணிகள்: வழிகாட்டி நாய்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட சேவை விலங்குகள் தவிர.
ஒலி அமைப்புகள்: ஏர் ஹார்ன்கள், விசில் போன்ற சத்தம் எழுப்பக்கூடிய பொருட்கள். மெகாஃபோன்கள், இசைக்கருவிகள். போர்ட்டபிள் ஸ்பீக்கர்கள்.