எலி மருந்தால் உயிரிழந்த குழந்தைகள்.. 5 நாட்கள் ஆகியும் நடக்காத பிரேத பரிசோதனை.. பின்னணி என்ன ?
Chennai Rat Kundrathur: சென்னை குன்றத்தூரில் எலி மருந்து நெடியால், உயிரிழந்த இரண்டு குழந்தைகளின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூறாய்வுக்காக வைக்கப்பட்டுள்ளது.
சென்னை குன்றத்தூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் கிரிதரன் (34). இவர் தனியார் வங்கி மேலாளராக பணிபுரிந்து வருகிறார். இவரது வீட்டில் எலி தொல்லை இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் மூலம் வீட்டில் மருந்து வைத்ததாக கூறப்படுகிறது. பின்பு இரவு மனைவி பவித்ரா (31 ) ஆறு வயது மகள் வைஷ்ணவி, ஒரு வயது மகன் சாய் சுதர்சன் ஆகியோர் அருகில் உள்ள கோவிலுக்கு சென்று விட்டு பின்னர் மீண்டும் வீட்டில் படுக்கையறையில் ஏசி போட்டு தூங்கி உள்ளனர்.
குடும்பத்தினரை பாதித்த நெடி
இதையடுத்து காலையில் அனைவருக்கும் மூச்சுத் திணறலுடன் வயிற்றுப்போக்கு ஆகி உள்ளது. இதையடுத்து அருகே இருந்தவர்கள் வீட்டில் இருந்த கிரிதரன், பவித்ரா இரண்டு குழந்தைகளையும் குன்றத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டும் ஆறு வயது சிறுமி வைஷ்ணவி ஒரு வயது சிறுவன் சாய் சுதர்சன் ஆகியோர் உயிரிழந்தனர். இதை அடுத்து கிரிதரன் மற்றும் பவித்ரா ஆகியோர் போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் ஆபத்தான நிலையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் பவித்ராவுக்கு நினைவு திரும்பியுள்ளது
குன்றத்தூர் போலீசார் விசாரணை
அவரிடம் காவல்துறை நடத்தி விசாரணையில் வீட்டில் எலி மற்றும் பூச்சி தொல்லை இருந்ததால் ஆன்லைன் மூலம் தி நகரில் உள்ள தனியார் பெஸ்ட் கன்ட்ரோலை அழைத்ததாகவும் தனியார் பெஸ்ட் கண்ட்ரோல் மூலம் வந்த நபர் ஒருவர் வீட்டில் கதவு ஜன்னல் உள்ளிட்டவற்றில் பேஸ்ட் போன்ற மருந்து வைத்ததாகவும் எலிக்கு வீட்டை சுற்றி டேப்லெட் வைத்ததாகவும் கூறியுள்ளார்.
மேலும், எலி மருந்தானது வீடு முழுவதும் காற்றில் பரவியதாலும், அதனை சுவாசித்த குடும்பத்தைச் சேர்ந்த 4 பேருக்கும் சில மணி நேரங்களில் உடல்நல குறைவு ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது என்றும், உடனடியாக எலி மருந்து வைத்த சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த நிர்வாகி, ஊழியர் என 3 பேர் மீது குன்றத்தூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
நிறுவனத்திற்கு சீல்
இத்தகைய சூழ்நிலையில், இரண்டு குழந்தைகள் இறந்து போனது குறித்து பெற்றோருக்கு இன்னும் தெரிவிக்காததால், இறந்து போன இரண்டு குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனை செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும், மேலும் இதில் சம்மந்தப்பட்ட நிறுவனத்திற்கு சீல் வைக்க போலீசார் முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டும் அல்லாது, இந்த சம்பவத்தில் தொடர்புடைய நிறுவனத்தின் ஊழியர்கள் தினகரன் மற்றும் சங்கர் தாஸ் ஆகிய இரண்டு பேரையும் குன்றத்தூர் போலீசார் கைது செய்துள்ளதாகவும், உரிமையாளர் பிரேம்குமார் தலைமறைவானதால் அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை தாமதம் ஏன் ?
இந்தநிலையில் உயிரிழந்த குழந்தைகளின் உடல் தாம்பரம் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இது சிக்கலான வழக்கு என்பதால் குழந்தைகள் எலி மருந்தின் நொடி காரணமாகத்தான், உயிரிழந்தது என்பதை உறுதி படுத்துவதற்காக தடயவியல் மருத்துவர் முன்னணியில் பிரேத பரிசோதனை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து உடல்கள் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளது. சிகிச்சை பெற்று வரும் குழந்தையின் தாய் மற்றும் தந்தை உடல்நிலை இன்னும் இரண்டு நாட்களில் சீராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெற்றோரின் உதவியுடன் பிரேத பரிசோதனை நடத்த திட்டமிட்டு இருப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.