விமானப் பயணிகளின் கவனத்திற்கு! நாளை வரை கொஞ்சம் அவதிதான்! 55 விமான சேவை ரத்து! - முழு விவரம்
விமான ஓடுபாதையில் தேங்கிய மழையால் சென்னை விமான நிலையத்தில் விமானங்களை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது.
ஃபெஞ்சால் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருகிறது. இதையொட்டி விமான நிலைய ஓடுபாதை உட்பட பல்வேறு சாலையில் மழை நீர் வெள்ளம்போல் காட்சி அளிக்கிறது. இதனால் சென்னையில் 55 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
விமான ஓடுபாதையில் தேங்கிய மழையால் சென்னை விமான நிலையத்தில் விமானங்களை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது. மோசமான வானிலை காரணமாக சென்னைக்கு வர வேண்டிய 19 விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. ஏற்கெனவே விமானங்களின் சேவை இரவு 7.30 மணிவரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மழை தொடர்ந்து பெய்து வருவதால், பயணிகளின் பாதுகாப்பு கருதி சென்னை விமான நிலையம் நாளை அதிகாலை 4 மணிவரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.
ஃபெஞ்சல் புயலின் முன்பகுதி கரையை கடக்கத் தொடங்கியது. அடுத்த 3 மணி நேரத்தில் கரையை கடக்க உள்ளது புயல். இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை செண்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும் சில விரைவு ரயில்கள் இன்று கடற்கரை ரயில்நிலையத்தில் இருந்து புறப்படுகின்றன. சென் ட்ரலில் இருந்து பெங்களூர், மங்களூர், திருப்பதி, மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் திருவள்ளூரில் இருந்து புறப்படும். செண்ட்ரலில் இருந்து செல்லும் இண்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் ஆவடி நிலையத்தில் இருந்து புறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை கடற்கரை - தாம்பரம் இடையிலான மின்சார ரயில் சேவை, பல்லாவரம் வரையே இயக்கப்படும் செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை, செங்கல்பட்டு முதல் வண்டலூர் வரையே இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.