Chennai: 200 ல் இருந்து 250 வார்டாக மாறும் சென்னை.. எந்தெந்த ஊராட்சிகள் இணைக்கப்பட உள்ளது? முழு விவரம்..
சென்னையில் தற்போது இருக்கும் 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகள் இணைத்து 250 வார்டாக மாற்றப்பட உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கட்டமைப்பு வசதிகள் மேம்படும் என கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 வார்டுகளுடன் புறநகரில் உள்ள 50 ஊராட்சிகளை சேர்த்து இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி சென்னை மாநகராட்சி 250 வார்டாக விரைவில் உயரும். இதற்கான அறிவிப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னை மாநகராட்சி 174 சதுர கி.மீ. பரப்பளவில் 155 வார்டுகளுடன் 10 மண்டலமாக செயல்பட்டது. நாட்டின் பெருநகர பட்டியலில் சென்னையை கொண்டு வரும் நோக்கில் 2011-ம் ஆண்டு சென்னை புறநகரில் இருந்த 9 நகராட்சிகள், 8 பேரூராட்சிகள், 25 ஊராட்சிகைள இணைத்து 424 சதுர கி.மீ. பரப்பளவில் சென்னை மாநகராட்சி எல்லை விரிவாக்கம் செய்யப்பட்டது.
அதன்படி 200 வார்டுகள், 15 மண்டலங்களாக தற்போது மாநகராட்சி செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி எல்லையை மீண்டும் விரிவாக்கம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஐ.ஏ.எஸ். அதிகாரி செந்தில்குமார் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த கமிட்டி சென்னை புறநகரில் உள்ள மேலும் 50 ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைக்க திட்டம் வகுத்துள்ளது.
அதன்படி செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருப்போரூர், சோழிங்க நல்லூர் சட்டசபை தொகுதியில் உள்ள சில ஊராட்சிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் மதுரவாயல், பூந்தமல்லி, மாதவரம், பொன்னேரி தொகுதிகளில் சில ஊராட்சிகள் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள சில ஊராட்சிகள் என 50 ஊராட்சிகளை சென்னையுடன் சேர்க்க ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
இதன்படி காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் இருந்து சென்னையுடன் இணைய உள்ள ஊராட்சிகள் விவரம் வருமாறு:-
திருப்போரூர் தொகுதியில் உள்ள நாவலூர், தாழம்பூர், சிறுசேரி, புதுப்பாக்கம், கானத்தூர், முட்டுக்காடு, கோவளம், சோழிங்கநல்லூர் தொகுதியில் உள்ள மேடவாக்கம், பெரும்பாக்கம், நன்மங்கலம், கோவிலம்பாக்கம், சித்தாலப்பாக்கம், வேங்கைவாசல், ஒட்டியம்பாக்கம், ஆலந்தூர் தொகுதியில் உள்ள மூவரசம்பட்டு, அய்யப்பன் தாங்கல், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம், பரணிப் புத்தூர், மவுலிவாக்கம், தரப்பாக்கம், கோவூர், பெரிய பணிச்சேரி, இரண்டாம் கட்டளை, தண்டலம்
ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் உள்ள மலையம்பாக்கம், கொல்லச்சேரி, கொழுமுனி வாக்கம். மதுரவாயல் தொகுதியில் உள்ள வானகரம், அடையாளம்பட்டு, அயப்பாக்கம், பூந்தமல்லி, காட்டுப்பாக்கம், செந்நீர்குப்பம், நசரத்பேட்டை, பேம்பூர், அகரம் மேல், வரதராஜபுரம், பாரிவாக்கம், மாதவரம், அன்னம்பேடு, வெள்ளானூர், மோரை, வடகரை, கிராண்ட்லைன், புள்ளி லைன், தீர்த்தகிரையம் பட்டு, விளாங்காடுபாக்கம், அழிஞ்சிவாக்கம், சென்றம்பாக்கம், பொன்னேரி தொகுதியில் உள்ள விச்சூர், வெள்ளிவாயல் சாவடி ஆகியவை அடங்கும்.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது, “ சென்னை மாநகராட்சியை ஒட்டி உள்ள ஊராட்சிகள் வளர்ச்சி அடைந்துள்ளன. வளர்ச்சிக்கு ஏற்ப கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியம். இதனால் 8 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட 50 ஊராட்சிகளை சென்னை மாநகராட்சியுடன் இணைத்து 250 வார்டுகளாக மாற்றப்பட உள்ளது. சட்ட சபை தொகுதி அடிப்படையில் மண்டலங்களையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மக்கள் தொகை அடிப்படையில் வார்டுகளின் பரப்பளவ ஆகியவை முடிவு செய்யபடும். இதுபற்றி அரசு துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்படுகிறது. அதன்பிறகுதான் இத்திட்டத்தை செயல்படுத்துவது குறித்து அறிவிப்பு வெளியாகும். அனேகமாக இந்த ஆண்டு இறுதிக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகலாம். சென்னை மாநகராட்சி விரிவடையும் போது வரி வருவாய் பெருகும். மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்கும். உலக வங்கி நிதி உதவியும் அதிகம் பெற முடியும்.
இதனால் தரமான சாலை வசதி, தெருவிளக்கு வசதிகள், பூங்காக்கள், பாதாள சாக்கடை வசதிகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் கொண்டு வர முடியும். எனவே அடுத்த மாநகராட்சி தேர்தலுக்கு முன்பாக இதற்கான நடைமுறை கொண்டு வரப்பட்டு ஊராட்சிகள் இணைக்கப்பட்டு விடும். சென்னையை போன்று தாம்பரம் மாநகராட்சியில் திரிசூலம், பொழிச்சலூர் உள்ளிட்ட 15 ஊராட்சிகள் அடுத்த தேர்தலுக்கு முன்பாக இணைக்கப்பட்டு விடும். இதே போல் ஆவடி மாநகராட்சி இணைக்கப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.