AIADMK Ex-Ministers : சொத்து குவிப்பு வழக்கு - முன்னாள் அமைச்சர்கள் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல்
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரில் முன்னாள் அதிமுக அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் கே.பி.அன்பழகன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது.
தமிழ்நாட்டில் 2016 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சி நடந்தது. இதில் சுகாதாரத்துறை அமைச்சராக சி.விஜய பாஸ்கரும், உயர்கல்வித்துறை அமைச்சராக கே.பி.அன்பழகனும் பதவி வகித்து வந்தனர்.
கே.பி.அன்பழகன் மீது தொடரப்பட்ட வழக்கு
தருமபுரி பாலகோடு தொகுதியில் கடந்த 2001 ஆம் ஆண்டில் இருந்து சட்டமன்ற உறுப்பினராக இருந்து வரும் கே.பி.அன்பழகன், 2016 -2021 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக பதவி வகித்தார். அவர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துக்குவிப்பில் ஈடுபட்டதாகவும், இதுதொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரிக்க வேண்டும் என கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதனடிப்படையில் தருமபுரி லஞ்ச ஒழிப்பு போலீசார் கே.பி அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, இரு மகன்கள், மருமகள் ஆகிய 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இதில் அன்பழகன் அவரது பெயரிலும், உறவினர் பெயரிலும் சுமார் 11.32 கோடி அதிகமாக சொத்து சேர்த்ததை லஞ்ச ஒழிப்புத்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதற்கிடையில் கே.பி.அன்பழகன் மீது புகார் கொடுத்த கிருஷ்ணமூர்த்தி, இந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை. அதனை தாக்கல் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு வந்தது. அப்போது லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் விரைந்து குற்றப்பத்திரிக்கை தாக்க செய்ய வேண்டுமென உத்தரவிட்டார். அதன்படி இன்று தருமபுரி நீதிமன்றத்தில் 10 ஆயிரம் பக்கத்திலான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
விஜயபாஸ்கர் மீது தொடரப்பட்ட வழக்கு
இதேபோல் அதிமுக ஆட்சியில் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சி.விஜயபாஸ்கர் திருவள்ளூர் அருகே மஞ்சக்கரணையில் மருத்துவ கல்லூரி அமைக்க முறைகேடாக சான்றிதழ் வழங்கிய விவகாரத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை எடுத்தது. இதுதொடர்பாக அவரது வீடு, தொடர்புடைய இடங்களில் சோதனையும் நடைபெற்றது. இதில் வருமானத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் சி.விஜயபாஸ்கர் மீது புதுக்கோட்டை நீதிமன்றத்தில் 216 பக்கத்திலான குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.