Chandrayaan 3: சந்திரயான் 3-க்காக ஸ்ரீ சந்திரபகவானுக்கு விஷேச அபிஷேகம்
கரூரில் சந்திரபகவானுக்கு விஷேச அபிஷேக ஆராதனை.
கரூரில் சந்திரயான் 3 க்காக ஸ்ரீ சந்திரபகவானுக்கு விஷேச அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நிகழ்ச்சி நடைபெற்றது.
உலகமே உற்று நோக்கும் சந்திரயான் 3 விண்கலம் வெற்றிகரமாக தரையிறங்கியதை நாடே கொண்டாடி வருகிறது. சந்திரயான் 3 விண்கலம் பத்திரமாக விண்ணில் தரையிறங்க வேண்டி, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள கோயில்களில் விஷேச பூஜைகள் நடத்தப்பட்டன.
இந்நிலையில் கரூரில் சந்திரபகவானுக்கு விஷேச அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கரூர் அருள்மிகு ஸ்ரீ விஸ்வகர்மா சித்தி விநாயகர் ஆலயத்தின் நவக்கிரஹ தெய்வங்களில் ஒன்றான ஸ்ரீ சந்திர பகவானுக்கு விஷேச அபிஷேகங்கள், பால், தயிர், இளநீர், சந்தனம்,திருநீர், திருமஞ்சனம், பன்னீர் உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களுடன் அபிஷேகம் நடைபெற்றது
தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதற்கான முழு ஏற்பாடுகளை ஆலய ஸ்தானிக்கர் வசந்த் சர்மா சிறப்பாக செய்திருந்தார்.
வரலாற்று சாதனை படைத்த இந்தியா:
இந்திய நேரப்படி சரியாக மாலை 6.04 மணிக்கு லேண்டரை இஸ்ரோ தரையிறக்கியுள்ளது. சந்திரயான் 3 திட்டத்தின் மிக முக்கிய கட்டமான இந்த தரையிறக்குதல் நிகழ்வானது, மொத்தம் 8 கட்டடங்களாக நடைபெற்றது. நான்கு என்ஜின்கள் மூலம் இயக்கப்பட்ட விக்ரம் லேண்டர், நிலவில் தரையிறக்குவதற்காக கடைசி 30 கிமீ தொலைவில் இரண்டு என்ஜின்களை துண்டித்தது.
பிரதமர் மோடி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ''ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் கிடைத்த வெற்றி; நிலவுக்கு மனிதனை அனுப்புவதுதான் அடுத்தகட்டத் திட்டம். இஸ்ரோ மாபெரும் சாதனை படைத்துள்ளது. சூரியனை ஆய்வு செய்ய ஆதித்யா எல் 1 விண்கலம் விரைவில் அனுப்பப்படும்'' என்றார்.
சந்திரயான்-3 நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு முன்னாள் இஸ்ரோ தலைவர் கே.சிவன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "நாங்கள் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்.இந்த தருணத்திற்காக நாங்கள் நீண்ட காலமாக காத்திருக்கிறோம். நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன்” என்றார்.