தமிழ்நாட்டில் தொடங்கிய முன் பனிகாலம்: மிதமான மழைக்கு வாய்ப்பு என வானிலை மையம் தகவல்!
முன்பனிக் காலம் தொடங்கியுள்ள சூழலில் 9ஆம் தேதிவரை மிதமான மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த மாதம் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. இதனால் தமிழ்நாட்டின் பல ஏரிகள், குளங்கள் நிரம்பியுள்ளன. பல மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. ஏரிகளும், குளங்களும், கிணறுகளும் நிரம்பியுள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதற்கிடையே தமிழ்நாட்டில் தற்போது முன்பனி காலம் தொடங்கியுள்ளதால் பனிமூட்டம் காணப்படுகிறது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று பகல் வரையிலும், திருநெல்வேலி, துாத்துக்குடி, ராமநாதபுரம், கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை பெய்யும். இன்று பிற்பகல் முதல் மிதமான மழைக்கே வாய்ப்புள்ளது.திருப்பூர், ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், தர்மபுரி மாவட்டங்களில் சில இடங்களில், மிதமான மழை பெய்யும்.
நாளை மறுதினம் (புதன்கிழமை) கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், 9ஆம் தேதி (வியாழக்கிழமை) கடலோர மாவட்டங்கள் மற்றும் அவற்றை ஒட்டிய உள்மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்ய வாய்ப்பு இரருக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, வங்கக்கடலில் நிலவிவந்த ஜாவத் புயல், தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு இழந்திருந்த நிலையில், அது மேலும் வலு குறைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக ஒடிசா கடற்கரையோரம் இருந்தது. இதனால் அந்த மாநிலத்தின் ஒருசில மாவட்டங்களில் மட்டும் கனமழை பெய்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Watch Video: ‛ஆர்.எஸ்.எஸ்., போல சேவை செய்ய விரும்புகிறேன்...’ வடிவேலு மகன் பரபரப்பு பேட்டி!