Pen Monument: கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம்; அனுமதி அளித்தது மத்திய அரசு..!
தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
![Pen Monument: கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம்; அனுமதி அளித்தது மத்திய அரசு..! central government give permission to former chief minister karunanidhi Pen Monument in chennai marina Pen Monument: கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம்; அனுமதி அளித்தது மத்திய அரசு..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/29/f02b806e0a300b31bd09fc7b50e9e7711682732894079728_original.jpeg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாடு அரசு சார்பில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சென்னை மெரினாவில் கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த அறிவிப்புக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மத்திய அரசின் அனுமதிக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடலின் நடுவே பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
பேனா நினைவுச்சின்னம்:
ரூபாய் 81 கோடி மதிப்பில் அமைக்கப்பட உள்ள இந்த பேனா சிலைக்காக கடலில் நடுவே 8 ஆயிரத்து 551 சதுர மீட்டர் இடம் பயன்படுத்தப்பட உள்ளது. கடலின் நடுவே அமைக்கப்பட உள்ள இந்த பேனா சின்னத்திற்கு மீனவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கருத்து கேட்பு கூட்டத்தில் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
பேனா நினைவுச்சின்னம் அமைக்க அனுமதி கோரி மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம் தமிழ்நாடு அரசு சார்பில் கடிதம் எழுதப்பட்டிருந்தது. இந்த நிலையில், கடலோர ஒழுங்குமுறை மண்டலத்தின் அனுமதி தேவைப்படும் திட்டங்களை பற்றி விவாதிக்க 14 உறுப்பினர்களை கொண்ட நிபுணர் மதிப்பீடு குழு ஏப்ரல் 17ஆம் தேதி ஆய்வு மேற்கொண்டது.
நிபுணர் மதிப்பீடு குழு:
இந்த ஆலோசனையின்போது, நடுக்கடலில் பேனா சின்னம் அமைப்பது தொடர்பாகவும் மத்திய சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீடு குழு பரிசீலனை மோற்கொண்டது. இந்த நிபுணர் மதிப்பீடு குழுவின் பரிந்துரையின் அடிப்படையிலே நடுக்கடலில் பேனா சின்னம் அமைக்கலாம் என மத்திய அரசு தனது முடிவை அறிவித்துள்ளது.
நடுக்கடலில் பேனா நினைவுச்சின்னம் அமைப்பதற்கு தமிழ்நாடு மாநில கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் கடந்த 5-ந் தேதி ஒப்புதல் அளித்தது. தமிழ்நாடு கடலோர மண்டல மேலாண்மை ஆணையம் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தாலும், I(A) என்று திட்ட அறிக்கையில் குறிப்பிட்ட பகுதியில் ஆமைகள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் எளிதாக சென்று வருவதற்கு இடையூறாக எந்த தூண்களும் அமைக்கப்படக்கூடாது என்று நிபந்தனை விதித்துள்ளது. மேலும், பேனா நினைவுச்சின்னம் அமைக்கும் கட்டுமான பணிகள் ஆமை இனப்பெருக்கும் காலத்தில் நடைபெறக்கூடாது என்றும் நிபந்தனை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
விதிகளில் திருத்தம்:
பேனா நினைவுச் சின்னம் அமைப்பதற்காக தமிழ்நாடு அரசு தேர்வு செய்துள்ள இடம் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிக்கை 2011ன் படி பகுதி IV(A)ன் கீழ் வருகிறது. இந்த பகுதி என்பது வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இருந்து 200 மீட்டர் தொலைவிற்கு புதியதாக எந்த கட்டுமானத்தையும் கட்ட முடியாது. ஆனால், கடந்த 2015ம் ஆண்டு இந்த விதியில் ஒரு சட்டத்திருத்தம் செய்யப்பட்டது.
மேலே குறிப்பிட்ட IV(A) வரையறுக்கப்பட்ட பகுதிகளில் நினைவிடங்கள்/ நினைவுச்சின்னங்கள் அமைப்பதற்கு விதிவிலக்கு அளித்து திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த திருத்தத்தின்படியே, மகாராஷ்ட்ராவில் மும்பையில் உள்ள ஆரபிக் கடற்கரையை ஒட்டி சத்ரபதி சிவாஜி சிலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் முன்னாள் முதலமைச்சர் மு. கருணாநிதிக்கு பேனா நினைவுச்சின்னம் அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்து இருந்தாலும், மீனவர்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)