தங்க விலைபோல உயர்ந்துவரும் அட்டை பெட்டியின் மூலப்பொருள்.. அட்டைப்பெட்டி தயாரிப்பாளர்கள் வேதனை
கரூரில், 3 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை இழக்க நேரிடும், என கரூர் அட்டைப்பெட்டி உரிமையாளர்கள் வேதனையுடன் மத்திய, மாநில அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கரூர் வீட்டு உபயோக ஜவுளி ஏற்றுமதி தொழிலுக்கு அட்டைப்பெட்டி முக்கியமாக விளங்கி வருகிறது. ஜவுளி தயார் செய்ததும் அவற்றை அட்டைப்பெட்டிகளில் அடைத்து வெளிநாடுகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கரூர் மாவட்டத்தில் 50க்கும் மேற்பட்ட அட்டைப்பெட்டி உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் உள்ளன. இங்கு 3 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். சமீபகாலமாக அட்டைப்பெட்டி தயாரிப்புக்கு மூலப்பொருளாக விளங்கும் கிராப்ட் காகிதத்தின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
மூலப்பொருட்களின் பற்றாக்குறை, வெளிநாட்டில் இருந்து வரும் கழிவு காகிதம் வரி, மற்ற கெமிக்கல், கப்பல் போக்குவரத்து சரியாக இல்லாததால் கப்பலில் வரும் கண்டெய்னர் வாடகை உயர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் டன்னுக்கு ரூ.2 ஆயிரம் உயர்த்தப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இது அட்டைப்பெட்டி உற்பத்தியாளர்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது.
இது குறித்து அட்டைப்பெட்டி உரிமையாளர் சதீஷ்குமார் கூறும்போது-
2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் கிராப்ட் காகிதம் டன்னுக்கு 25 ஆயிரம் ரூபாயாக இருந்தது. தற்போது 50 ஆயிரம் ரூபாயாக விலையேற்றம் அடைந்துள்ளது. ஏற்கனவே அட்டைப்பெட்டிகளுக்கான கிராப்ட் காகிதம் சரிவர கிடைக்கவில்லை. நூல் விலை உயர்வு காரணமாக ஜவுளி உற்பத்தியும் குறைந்துள்ளதால் அட்டைப்பெட்டி தயாரிப்புக்கான ஆர்டர் குறைந்து விட்டது. கடந்த இரண்டு மாத காலங்களில் மூலப்பொருள் அன்றாடம் விலை ஏற்றப்பட்டு வருகிறது.
அட்டைப்பெட்டி தயாரிப்பு நிறுவனங்களில் வாரத்திற்கு 2 அல்லது 3 நாட்களுக்கு மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்கும் வகையிலேயே ஆர்டர் இருக்கிறது. இந்தநிலையில் கிராப்ட் காகிதத்தின் விலை மேலும் உயர்வால் வேலையிழப்பு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இப்படியே சென்றால் அட்டைப்பெட்டி உற்பத்தி தொழில் முடங்கும் அபாயம் ஏற்படும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, அட்டைப் பெட்டி உற்பத்தி தொழிலை பாதுகாக்கும் வகையிலும், எங்களை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையிலும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
கிராப்ட் காகிதத்தின் விலை 100 சதவீதம் உயர்ந்துள்ளதால் அட்டைப்பெட்டி உற்பத்தி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கரூரில் பல ஆயிரம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிக்கும் சூழ்நிலை உள்ளதால் மத்திய மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.