மருத்துவப் படிப்புகளுக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் அங்கீகாரம் ரத்து: தமிழ்நாடு அரசு எச்சரிக்கை
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும். கூடுதல் கட்டணம் வசூலித்தால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும்
தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் அக்.17ஆம் தேதி வெளியான நிலையில், மாநில இடங்களுக்கான கலந்தாய்வு அக்டோபர் 19-ம் தேதி தொடங்கியது.
விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புக் கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் நேரடியாக அதே தினத்தில் தொடங்கியது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டுக்கான கலந்தாய்வு அக்டோபர் 20-ம் தேதி நடைபெற்றது. இதில் 565 பொது மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இடங்கள் நிரப்பப்பட்டன. அதைத் தொடர்ந்து பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இணைய வழியில் அக்டோபர் 21ஆம் தேதி தொடங்கி, 25ஆம் தேதி வரை நடைபெற்றது. அவர்களுக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் அக்டோபர் 31ஆம் தேதி அன்று வழங்கப்பட்டன.
இதற்கிடையே மாணவர்கள் நவம்பர் 7ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கல்லூரியில் சேர வேண்டும் என்று அறிவிப்பு வெளியானது. இதைத் தொடர்ந்து சேர்க்கை விறுவிறுப்புடன் நடைபெற்று, மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர்.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான முதல் சுற்றுக் கலந்தாய்வில் 7,036 மாணவர்களுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதில் 6,078 மாணவர்கள் ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள இடங்களுக்கு விண்ணப்பித்தவர்களில், 1,209 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதில் 639 பேர் ஒதுக்கீட்டு ஆணையைப் பதிவிறக்கம் செய்துள்ளனர்.
இந்த நிலையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை மட்டுமே வசூலிக்க வேண்டும் என்றும் கூடுதல் கட்டணம் வசூலித்தால் கல்லூரியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் தமிழக சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த ஆண்டு கலந்தாய்வில், அதிக கட்டணம் வசூலிப்பதை தடுக்கும் விதமாகவும், மாணவர்களின் நலன் கருதியும் புதிய நடைமுறை கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, கலந்தாய்வில் இடத்தை தேர்வு செய்ததும், சம்பந்தப்பட்ட மாணவர் அந்த இடத்துக்கான அனைத்து கட்டணத்தையும், மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழுவிடம் செலுத்திவிட வேண்டும். சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு மாணவர், சேர்க்கை கடிதத்தை மட்டும் கொண்டு சென்றால் போதும், கல்விக்கான கட்டணத்தை ஏற்கனவே செலுத்தியிருந்த மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு, சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு கொடுத்துவிடும்.
இதுதவிர விடுதிக் கட்டணம், பேருந்து கட்டணம் மற்றும் கல்லூரி வளர்ச்சி நிதியாக ரூ.40 ஆயிரம் ஆகியவற்றை மட்டுமே தனியார் மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக வசூலித்துக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
முதுகலை படிப்புகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ddpgselcom@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு மெயில் செய்து புகார் செய்யலாம்.
இளங்கலை படிப்புகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் ddugselcom@gmail.com என்ற இ-மெயில் முகவரிக்கு மெயில் செய்து புகார் செய்யலாம்.
கூடுதல் தகவல்களுக்கு https://tnmedicalselection.net/news/05112022060421.pdf என்ற இணைய முகவரியை க்ளிக் செய்து பார்க்கவும்.