தமிழ்நாட்டில் 49 நாட்களுக்கு பிறகு மீண்டும் தொடங்கியது பேருந்து சேவைகள்..!
கொரோனா ஊரடங்கு தளர்வுகள் காரணமாக இயக்கப்படாமல் இருந்து பேருந்துகள் 49 நாட்களுக்கு பிறகு இன்று முதல் மீண்டும் இயங்கத் தொடங்கியது.
தமிழ்நாட்டில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை காரணமாக கடந்த மே மாதம் 10-ஆம் தேதி முதல் பொதுப்போக்குவரத்து சேவைக்கு தடை, காய்கறி மளிகை கடைகளுக்கு திறக்க நேரம் நிர்ணயம் உள்பட இயல்பு வாழ்க்கையை முடக்கும் அளவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இடையில் கடந்த மே மாதம் 24-ந் தேதி முதல் இரு வாரத்திற்கு எந்த தளர்வுகளும் இல்லாத ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இந்த நிலையில், கடந்த சில வாரங்களுக்கு முன்புதான் தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு குறையத் தொடங்கியதை அடுத்து, பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டது. மாநிலம் முழுவதும் கோவை, திருப்பூர் நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 11 மாவட்டங்கள் முதல் வகையாகவும், பெரம்பலூர், திருச்சி, மதுரை உள்பட 23 மாவட்டங்கள் இரண்டாவது வகையாகவும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் மூன்றாவது வகையாகவும் வகைப்படுத்தப்பட்டது.
இதில், மூன்றாவது வகையில் இடம்பெற்றிருந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் கடந்த 21-ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகளுக்கும், சென்னையில் மெட்ரோ சேவைகளுக்கும் தமிழக அரசு அனுமதி அளித்தது. இதன்படி, அந்த 4 மாவட்டங்களில் மட்டும் கடந்த ஒரு வாரமாக பேருந்து சேவை இயங்கி வந்தது.
இந்த நிலையில், தமிழக அரசின் புதிய ஊரடங்கு தளர்வுகளின்படி முதல் வகையில் இடம்பெற்றுள்ள 11 மாவட்டங்கள் தவிர, இரண்டாவது வகையில் இடம்பெறுள்ள 23 மாவட்டங்களுக்கும் பேருந்து சேவைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏற்கனவே பேருந்து சேவைகள் அமலில் உள்ள 4 மாவட்டங்கள் மற்றும் புதியதாக அனுமதிக்கப்பட்டுள்ள 23 மாவட்டங்களுக்கு இடையேயும் இன்று முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும். மாவட்டங்களுக்கு இடையேயும் பொதுப்போக்குவரத்து சேவை அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 49 நாட்களுக்கு பிறகு இன்று காலை 6 மணி முதல் இயங்கத் தொடங்கியது.
இதற்காக, மாநிலம் முழுவதும் 9 ஆயிரத்து 333 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. பேருந்துகள் நீண்ட நாட்களுக்கு பிறகு இயங்குவதால் ஓட்டுநர்கள் பேருந்துகளுக்கு தேங்காயில் சூடம் ஏற்றி வழிபட்டனர். விரைவுப் பேருந்துகள் 49 நாட்களுக்கு பிறகு மீண்டும் இயக்கப்பட உள்ளதால் பேருந்து பணிமனைகளில் சிறப்பு வழிபாடும் நடத்தப்பட்டது. முன்னதாக, கடந்த சில தினங்களாக பேருந்துகளில் பழுதுபார்க்கும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
நீண்ட நாட்களுக்கு பிறகு தொடங்கப்பட்டுள்ள பேருந்து சேவையில் குளிர்சாதன வசதி இல்லாமல் 50 சதவீத பயணிகளுடன் பயணிக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்றும், பேருந்துகளில் ஏறும்போது சானிடைசரை பயன்படுத்த வேண்டும் என்றும், பேருந்துகளில் கட்டாயம் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு பேருந்துகள் இயக்கப்படுவதால் வெளியூர் மற்றும் வேலைக்கு செல்லும் பொதுமக்கள் ஆர்வத்துடன் காலை முதல் பேருந்துகளில் பயணித்து வருகின்றனர். முதல் வகையில் இடம்பெற்றுள்ள கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, மயிலாடுதுறை, உள்ளிட்ட 11 மாவட்டங்கள் நீங்கலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.