EWS 10% Reservation: 10 சதவீத இட ஒதுக்கீடு வழக்கு; உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சீராய்வு மனு..!
முன்னதாக உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு வழக்கில் திமுக சீராய்வு மனுவை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.
10 சதவீத இட ஒதுக்கீடு:
பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கும் அவசர சட்டத்தை நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசு நாடாளுமன்றத்தில் அவசர சட்டமாக கொண்டுவந்தது.இது பெரும்பான்மையுடன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அவர் ஒப்புதல் அளித்ததால் இந்த சட்டம் அமலில் உள்ளது.
இந்த சட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பலரும் வழக்கு தொடர்ந்தனர். தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதி, விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோரும், இச்சட்டத்திற்கு எதிராக மனுத்தாக்கல் செய்தனர். இதில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு கடந்த நவம்பர் 7 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது.
View this post on Instagram
சீராய்வு மனு
அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கி செல்லும் என்று தெரிவிக்கப்பட்டது.முன்னதாக பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள முன்னேறிய வகுப்பினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் 103-ஆவது அரசியல் சட்டத்திருத்தம் செல்லும் என்று உச்சநீதிமன்றம் அறிவித்துள்ள நிலையில், இந்தத் தீர்ப்பு “சமூகநீதியை வென்றெடுப்பதற்கான நூற்றாண்டு காலப் போராட்டத்திற்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இதைத் தொடர்ந்து தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கையில் இந்த தீர்ப்பு குறித்து ஆலோசிக்க தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நவம்பர் 12 ஆம் தேதி தலைமை செயலகத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்தும், அதனை மறுசீராய்வு செய்யக்கோரியும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மனு தாக்கல் செய்யப்படும் என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு வழக்கில் திமுக சீராய்வு மனு ஒன்றை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது.